சர்வதேச தகவல் அறியும் தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சுடன் இணைந்து அரசாங்க தகவல் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ள சர்வதேச தகவல் அறியும் மாநாடு நாளை புதன்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் ஆரம்பமாகின்றது. இந்த மாநாட்டில் இந்தியாவின் ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி அஜித் பிரகாஷ் ஷா சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள உள்ளார் .
மேலும் மாநாட்டில் .120 க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து பிரதிநிதிகள் கலந்து
கொள்ளவுள்ளனர் என்று ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற உடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்;
ஜனநாயகத்தையும் நல்லாட்சியையும் அடிப்படை சுதந்திரமாக ஏற்றுக் கொண்டுள்ள 120 நாடுகள் தமது நாடுகளில் தகவல் அறியும் சட்ட மூலத்தை நிறைவேற்றியுள்ளன .
அதனடிப்படையில் தகவல் அறியும் உரிமை தொடர்பான சர்வதேச மாநாடு ஒன்றை இலங்கையில் நடத்தவுள்ளோம். கொழும்பில் இரண்டு நாட்களாக நடைபெறும் சர்வதேச தகவல் அறியும் மாநாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஆரம்பிக்கப்படும். சபாநாயகர் கரு ஜயசூரிய, ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க ஆகியோர் கலந்துகொள்ள உள்ளதோடு ,இந்தியாவின் ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி அஜித் பிரகாஷ் ஷா சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள உள்ளார் .
இதற்கு மேலதிகமாக வெளிநாட்டில் குறிப்பாக தகவல் அறியும் சட்ட மூலம் அமுலில் உள்ள மேற்குறிப்பிட்ட 120 நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.