ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை மீதான அறிக்கை உள்ளக விசாரணைகளை பலப்படுத்தும் வகையில் அமையும் என்ற நம்பிக்கை உள்ளது.
இலங்கை குறித்த சர்வதேச தலையீடுகளை இலங்கை அரசாங்கம் சரியான முறையில் கையாளும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
தவறியேனும் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட்டிருக்காவிடின் தொடர்ந்தும் மஹிந்தவின் ஆக்கிரமிப்பில் நாடு இருந்திருந்தால் எமது இராணுவ வீரர்கள் நிச்சயமாக சர்வதேச நீதிமன்றில் தண்டிக்கப்பட்டிருப்பார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 30ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ள நிலையில் இலங்கை தொடர்பில் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளது. இந்த நிலையில் இலங்கையின் மீதான சர்வதேச தலையீடு தொடர்ந்தும் காணப்படும் வாய்ப்புக்கள் உள்ளனவா என வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ள நிலையில் இலங்கை தொடர்பில் இன்னும் இரு தினங்களில் அறிக்கை முன்வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இப்போது இலங்கை தொடர்பில் எழுந்துள்ள சர்வதேச அழுத்தங்கள் இன்று நேற்று ஆரம்பமாகிய ஒன்றல்ல. யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட நேரத்தில் இருந்து இலங்கை இராணுவத்தின் மீது போர்க்குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
ஆனால் இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் நிரூபிக்கக் கூடிய ஆதாரங்கள் எவற்றையும் முன்வைக்கவில்லை. எனினும் சர்வதேச ஊடகங்கள் ஒருசில தமது தனிப்பட்ட வியாபார மற்றும் ஒரு சிலரின் தூண்டுதலின் பெயரில் பொய்யான புகைப்படங்களையும், வீடியோ காணொளிப்பதிவுகளையும் தயாரித்து இலங்கை இராணுவத்துக்கு எதிராக வெளியிட்டு வருகின்றனர்.
எனினும் இந்த ஆதாரங்கள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானவை. இலங்கை இராணுவம் கடந்த காலத்தில் மிகப்பெரிய மனிதாபிமான சேவையினை செய்துள்ளது. இந்த நாட்டில் பிரிவினைக் கொள்கையில் பலமடைந்த ஆயுததாரிகளின் தீவிரவாத செயற்பாடுகளினால் நாட்டில் மூவின மக்களும் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக வடக்கிலும் கிழக்கிலும் மிக மோசமான அடக்குமுறை செயற்பாடுகள் காணப்பட்டன. அவ்வாறான சூழலில் இருந்து நாட்டையும் மக்களையும் காப்பாற்றியுள்ளோம்.
யுத்தம் முடிவடைந்து கடந்த ஐந்து ஆண்டுகளில் நாட்டின் சூழல் முழுமையாக மாற்றமடைந்துள்ளது. வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டின் அனைத்து பகுதிகளும் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன. அதேபோல் நாட்டுக்கு எதிரான உள்நாட்டு அச்சுறுத்தல்கள் அனைத்தும் முழுமையாக தடுக்கப்பட்டுள்ளன. ஆகவே இவை அனைத்துமே ஒரு நாட்டின் மிக முக்கிய உள்நாட்டு செயற்பாடுகளாகும். ஆகவே இவற்றை சர்வதேசம் அமைப்புக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆனால் சர்வதேச அளவில் செயற்படும் புலம்பெயர் புலிகள் அமைப்புகள் மற்றும் பிரிவினைவாத அமைப்புக்களின் தேவையை பூர்த்திசெய்யும் வகையில் சர்வதேச தரப்பும் செயற்படுகின்றது. ஒரு பக்க நியாயங்களை மாத்திரமே கவனத்தில் கொண்டு சர்வதேசம் செயற்படுகின்றது என்பது தெளிவாகத் தெரிகின்றது. ஆயினும் கடந்த காலத்தில் சர்வதேச தலையீடுகள் அதிகரித்து காணப்பட்டாலும் இப்போது நிலைமை முழுமையாக மாற்றமடைந்துள்ளது.
கடந்த ஆட்சியில் முன்வைக்கப்பட்டிருந்த சர்வதேச தலையீடுகள் இப்போது குறைவடைந்துள்ளன. அதேபோல் புதிய அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை பலமடைந்துள்ளது. ஆகவே இவை அனைத்தையும் நல்ல முன்னேற்றங்களாகவே நாம் கருதுகின்றோம். அத்தோடு இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை முன்வைக்கும் விசாரணை அறிக்கையும் இலங்கையை பாதிக்காத வகையிலும் சர்வதேசத்தின் நேரடித் தலையீடுகள் எவையும் இல்லாத வகையிலும் அதேவேளை உள்ளக விசாரணை பொறிமுறையினை பலப்படுத்தும் வகையிலுமே அமையும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது.
இந்த ஆட்சிமாற்றம் நாட்டுக்கும் இராணுவ வீரர்களுக்கும் நன்மையளிக்கும் வகையில் அமைந்துள்ளது. தவறியேனும் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட்டிருக்காவிடின் நாட்டின் நிலைமை முழுமையாக மாறியிருக்கும். மஹிந்தவின் ஆக்கிரமிப்பில் நாடு தொடர்ந்தும் இருந்திருந்தால் எமது இராணுவ வீரர்கள் நிச்சயமாக சர்வதேச நீதிமன்றில் தண்டிக்கப்பட்டிருப்பார்கள். கடந்த காலத்தில் குறிப்பிட்ட சில அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல இராணுவ வீரர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. ஆனால் இன்று அவை அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன. அதேபோல் நேரடி சர்வதேச தலையீட்டை ஏற்படுத்தி நாட்டில் மீண்டுமொரு நெருக்கடி நிலைமையை உருவாக்கியிருப்பார்கள். ஆயினும் அவ்வாறான செயற்பாடுகளில் இருந்து நாடு பாதுகாக்கப்பட்டுள்ளது.
அதேபோல் இப்போதிருக்கும் நிலையில் இலங்கை குறித்த சர்வதேச தலையீடுகளை இலங்கை அரசாங்கம் சரியான முறையில் கையாளும் என நம்பமுடியும். எவ்வாறு இருப்பினும் இலங்கை தொடர்பில் உள்ளக விசாரணைப் பொறிமுறையினை கையாள வேண்டும் என்பதே எமது இப்போதைய நிலைப்பாடாகும். அதேபோல் இலங்கை இராணுவ வீரர்களை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த எமது அரசாங்கம் ஒருபோதும் இடம் கொடுக்காது. யுத்தத்தில் ஏதேனும் மனித உரிமைகளை மீறும் வகையில் அரச தரப்பினால் குற்றங்கள் இழைக்கப் பட்டிருக்குமாயின் அதையும் சட்டப்படி கையாள்வோம் எனக் குறிப்பிட்டார்.