- ஊடகப்பிரிவு
2013 ஆம் ஆண்டு சர்வதேச ரீதியில் கையெழுத்திடப்பட்ட “வர்த்தக வசதிகள் உடன்பாடு” தொடர்பில் இலங்கை ஏற்றுமதி வர்த்தகர்களுக்கு தெளிவுபடுத்தும் விழிப்புணர்வுச் செயலமர்வு நாளை (26) கொழும்பு சின்னமன் கிரேண்ட் ஹோட்டலில் ஆரம்பமாகின்றது. முதல் நாள் அமர்வில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டு தொடக்க உரை ஆற்றவுள்ளார்.
இந்த செயலமர்வை ஜெனீவாவைத் தளமாகக் கொண்டியங்கும் வர்த்தகத்திற்கான உலகளாவியக் கூட்டு (Global Alliance For Trade in Geneva) மற்றும் கொழும்பில் இயங்கும் சர்வதேச வணிக சங்கம் (International Chamber Of Commerce in Colombo) ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.
உலக வர்த்தக மையம் 1995 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பின்னர் முதலாவது பல்பக்க வர்த்தக உடன்பாட்டுக்கு உலக நாடுகள் இணக்கம் தெரிவித்து 2013 ஆம் ஆண்டு அது கைச்சாத்திடப்பட்டது.112 நாடுகள் கையெழுத்திட்ட இந்த ஒப்பந்தம் இந்த வருடம் பெப்ரவரி மாதமே செயற்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது (Activated).
உடன்பாடு எட்டப்பட்டு இத்தனை வருட காலம் அது தேக்க நிலையில் இருந்த பின்னர் இந்த வருட ஆரம்பத்தில் செயற்பாட்டு நிலையை அந்த ஒப்பந்தம் அடைந்த போதும் இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு இது தொடர்பிலான எந்த அறிவும் இல்லாத நிலையும் எத்தகைய தெளிவும் வழங்கப்படாத நிலையுமே இருந்து வந்தது.
இந்த காரணத்தினாலாயே இவ்வாறான செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டதாக வணிக சங்கத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சரின் தொடக்கவுரையைத் தொடர்ந்து இந்த நிகழ்வில் வர்த்தகத்திற்கான உலகளாவியக் கூட்டின் உப தலைவர் டோனியா ஹம்மாமி மற்றும் சர்வதேச வணிக சங்கத்தின் இலங்கைக்கான தலைவர் கீர்த்தி குணரத்ன ஆகியோரும் உரையாற்றவுள்ளனர்.