நாளை நடைபெறவுள்ள சர்வ கட்சி மாநாட்டில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி கலந்துகொள்ளப் போவதில்லை என்று கட்சியின் தவிசாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது,
“பௌத்த பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றிக் கொண்ட இறுமாப்பில் முஸ்லிம்களையும் முஸ்லிம் கட்சிகளையும் புறக்கணித்து உதாசீனப்படுத்தியவர்கள், முஸ்லிம்களின் ஜனாசாக்களை பதைபதைக்க தீயிலிட்டுப் பொசிக்கியவர்கள், முஸ்லிம் கட்சிகளின் தலைமைகளை அரசியல் பழிவாங்கும் நோக்கில் சிறையில் அடைத்தவர்கள், கடந்த காலங்களில் ஆட்சிபீடம் ஏறுவதற்கு; சிறுபான்மை கட்சிகளும் சிறிய கட்சிகளும் அவர்களுக்கு செய்த உதவி ஒத்தாசைகளை நன்றி மறந்தவர்கள், 2/3 பாராளுமன்றப் பெரும்பான்மை, நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி எல்லாம் எங்கள் வசம் என்று தலைக்கனம் கொண்டிருந்தவர்கள், இன்று தங்கள் நிலையிலிருந்து இறங்கி வந்து அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்புக் கொடுக்கின்றார்கள் என்றால், அவர்கள் தங்கள் தோல்வியை ஒப்புக்கொண்டு விட்டார்கள் என்பதே அர்த்தமாகும்.
எனவே, மக்கள் மன்றத்தில் தோல்வியடைந்தவர்கள் நாட்டை சரியான முறையில் பரிபாலனம் செய்ய முடியாதவர்கள் வீட்டுக்குச் செல்வதே உத்தமமாகும்.
இன்று நாட்டு மக்கள் நடுத்தெருவில் எரிபொருளுக்கும், அத்தியாவசியப் பொருட்களுக்கும் அலைமோதித் திரியும் நிலைமையில், பாடசாலை மாணவர்கள் பரீட்சைக்கு படிக்க முடியாமல் மின்வெட்டும், பரீட்சைகளை நடத்த காகிதாதிகள் கூட இல்லாத நிலையில் பாடசாலைகளும் திணறிக் கொண்டிருக்கும் நிலையிலும், இந்த சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொள்வதால் எந்தவிதமான பிரயோசனமும் ஏற்படப்போவதில்லை.
மாறாக, அவர்கள் மீது மக்களுக்குள்ள வெறுப்பை எல்லோருடைய தலையிலும் கட்டிவிட ஆட்சியாளர்கள் எடுக்கும் கபடத்தனத்திற்கு ஆளாகாமல், எம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய தேவைப்பாடும், அவர்கள் ஆட்சியைத் தக்க வைக்க எதிர்க்கட்சிகளை பகடைக்காய்களாகப் பயன்படுத்திக்கொள்வதை தவிர்ப்பதற்காகவும், மேற்படி ஜனாதிபதியின் சர்வகட்சி மாநாட்டைப் பகிஷ்கரிக்கப் போவதாக தவிசாளர் அமீர் அலி மேலும் கூறினார்.