சவுதி அரேபியாவில் தொழில் புரியும் பெண்களுக்கு ஆகக்குறைந்த சம்பளமாக ரூபா 60 ஆயிரம் வழங்கப்பட வேண்டும் என்கிறது இலங்கை அரசு.இலங்கையிலிலுந்து சவுதி அரேபியாவில் தொழில் புரியும் பெண்களுக்கு ஆகக்குறைந்த சம்பளமாக ரூபா 60 ஆயிரம் வழங்கப்பட வேண்டும் என எதிர்பார்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துக்கோறள கூறுகின்றார்.
இலங்கையிலுள்ள அந்நாட்டு தூதுவராலயத்துடன் ஏற்கனவே நடத்தியுள்ள பேச்சுவார்தையின் பேரில் இது தொடர்பாக ஆராய்வதற்காக குழுவொன்று வருகை தரவிருப்பதாகவும் அவர் பிபிசியிடம் கூறியுள்ளார். தற்போது அந்நாட்டில் தொழில் புரியும் பணிப்பெண்கள் மாதமொன்று ரூபா30 தொடக்கம் 35 ஆயிரம் (800-10000 ரியால் ) சம்பளமாக பெறுவதாக கூறப்படுகின்றது.
இந்த தொகை ஆகக் குறைந்தது ரூபா 60 ஆயிரம் ( 1500 சவுதி ரியால் ) ஆக இருக்க வேண்டும் என்பதே தமது கோரிக்கை என தெரிவித்துள்ள அமைச்சர் தலதா அத்துக்கோறள ரூபா 50ஆயிரத்திற்கும் 60 ஆயிரத்திற்கும் இடைப்பட்ட தொகையாவது கிடைக்க முயற்ச்சிகள் முன்னெடுக்கப்படும் என்றும் குறிப்பிடுகின்றார்.
இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக எதிர்பர்க்கப்படும் சவுதி அரேபியா குழுவுடன் அந் நாட்டில் இலங்கை பணிப் பெண்ககள் எதிர்கொள்ளும் துன்புறுத்தல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் தொடர்பாகவும் பேசுப்படும் என்றும் அமைச்சர் கூறுகின்றார்.
சவுதி அரேபியாவிற்கு வீட்டு பணிப்பெண்களாக அழைக்கப்படும் பெண்களுக்கு உள்நாட்டு முகவர்கள் ஊடாக எஜமான்களால் ஒரு தொகை பணம் கமிஷனாக வழங்கப்படுகின்றது. அந்த கமிஷன் தொகையில் முழுத் தொகையும் அநேகமாக பணிப் பெண்களுக்கு கிடைப்பது இல்லை என ஆட்களை திரட்டி கொடுக்கும் உள்ளுர் முகவர்கள் கூறுகின்றார்கள்.
இந்த கமிஷன் தொகை நிறுத்தப்பட்டால் இந்த சம்பள அதிகரிப்பு சாத்தியப்படுவது இலகுவாக அமையும் என்றும் உள்ளுர் முகவர்களினால் சுட்டிக்காட்டப்படுகின்றது.