Breaking
Mon. Nov 25th, 2024

சவூதி அரேபியாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் விளைவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்போம் என்று பாகிஸ்தான் எச்சரித்தது.யேமனில் ஷியா பிரிவு ஹூதி பயங்கரவாதிகள் நடத்தி வரும் தாக்குதலைத் தொடர்ந்து, அந்நாட்டு அதிபர் சவூதியில் தஞ்சம் புகுந்துள்ளார்.

இந்நிலையில், யேமனில் ஹூதி பயங்கரவாத நிலைகள் மீது சவூதி தலைமையிலான கூட்டுப் படையினர் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். யேமன் நிலவரம் குறித்து விவாதிக்க பாகிஸ்தானின் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் தலைமையிலான குழு சவூதிக்குச் செவ்வாய்க்கிழமை சென்றது.யேமன் நிலவரம் தொடர்பாக அந்நாட்டு பாதுகாப்புத் துறையினருடன் பேச்சு நடத்திய பின்னர், புதன்கிழமை அக்குழுவினர் பாகிஸ்தான் திரும்பினர்.

அதையடுத்து, யேமனில் கூட்டு ராணுவ நடவடிக்கை எடுப்பது குறித்து விவாதிக்க பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் தலைமையில் உயர் நிலைக் கூட்டம் இஸ்லாமாபாதில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டுப்படையில் இணைந்து போரிடுவது குறித்து அக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. எனினும் அது தொடர்பாக இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. அக்கூட்டத்தின் முடிவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தில் தெரிவித்திருப்பதாவது:யேமனில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை சில குழுக்கள் கவிழ்த்துள்ளன. இந்தச் செயலுக்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவிக்கிறது.

இந்த விவகாரத்தில் சவூதி தலைமையில் ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, சவூதியின் இறையாண்மைக்கு ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்படுமானால், அதற்கு காரணமானவர்களுக்கு எதிராக பாகிஸ்தான் கடும் நடவடிக்கை எடுக்கும் என்று அக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், இந்த விவகாரத்தைப் பற்றி விவாதிக்க, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை திங்கள்கிழமை நடத்த முடிவு செய்யப்பட்டது.

Related Post