Breaking
Fri. Nov 15th, 2024
போக்குவரத்துச் சேவையினை பயணிகளுக்கு மகிழ்ச்சி தரக்கூடியதும் திருப்தியளிக்க  கூடியதுமான ஒரு சேவையாக மாற்றியமைத்தலானது இன்றியமையாத ஒன்றாக காணப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.
கண்டியின் குண்டசாலையில் நேற்று முந்தினம்(18) பிற்பகல் இடம்பெற்ற பொதுப் பயணிகள் போக்குவரத்துச் சேவை அறிமுகப்படுத்தும் ‘சஹசர’ முன்னோடிக் கருத்திட்டத்தின் ஆரம்ப வைபவத்தில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

நாட்டுக்கு இன்றியமையாத ஒரு மாற்றத்தைக் கொண்டுவரும் போது ஒருசிலர் அதனைச் சரியாகப் புரிந்துகொள்ளாமலும் அதனைக் குழப்புகின்ற விதமாகவும் அவற்றுக்கு முட்டுக்கட்டையாக செயற்படுகின்ற போதும் அதற்காக தம்மை அர்ப்பணிப்பதன் மூலமே இப்பணியினை வெற்றிகரமாக நிறைவேற்றக்கூடியதாயுள்ளதாக ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

தொழிற்சங்கங்களின் அதிகாரப் போராட்டம் காரணமாகவும் தேவைக்கு அதிகமாக ஊழியர்களை ஆட்சேர்த்தல் காரணமாகவும் இலங்கைப் போக்குவரத்து சபையானது பின்னடைவைச் சந்தித்து வருவதாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இதன் காரணமாக இந்த நாட்டின் பொதுப் பயணிகள் போக்குவரத்திற்கான புதியதொரு வேலைத்திட்டத்தின் தேவை எழுந்துள்ளதாக குறிப்பிட்டார்.

தனியார் மற்றும் இலங்கைப் போக்குவரத்து சபை தொடர்பாக நிலவும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகாணல் அத்தியவசியமாக உள்ள ஒரு காலகட்டத்தில் இவ்வாறான கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி தனது நன்றிகளைத் தெரிவித்தார். அதேபோல் இவ்வாறான கருத்திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்காக  அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இக்கருத்திட்டத்தை நாடுபூராகவும் நடைமுறைப்படுத்துவதற்குப் பாடுபட வேண்டுமெனக் குறிப்பிட்டார்.

புதிய கருத்திட்டத்தை அறிமுகப்படுத்து முகமாக பேருந்துகளில் காட்சிப்படுத்தப்படும் ‘சஹசர’ பெயர்ப்பலகையினை திரைநீக்கம் செய்து வைத்தல் ஜனாதிபதியின் கரங்களினால் மேற்கொள்ளப்பட்டதுடன் “சஹசர முற்கொடுப்பனவு அட்டை” மூலமான முதலாவது அனுமதிச்சீட்டினை ஜனாதிபதி பெற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து உபாயவழிமுறைகள் முகாமைத்துவ நிறுவனத்தின் தலைவரினால் கருத்திட்ட அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

இதன் போது பயணிகள் அனுமதிச்சீட்டு வழங்கும் இயந்திரம் மற்றும் சஹசர சீருடைத் தொகுதி ஆகியவற்றை பேருந்து நடாத்துனர்களிடம் ஒப்படைத்தலின்  அடையாளமாக அவற்றை ஜனாதிபதி வழங்கி வைத்ததுடன் 5000 ரூபாய் பெருமதியான ‘சஹசர’ முற்கொடுப்பனவு அட்டைகள் பேருந்து உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அமைச்சர்களான எஸ்.பீ.திசாநாயக்க, ஏ.ஜே.ஹலீம், மத்திய மாகாண ஆளுனர் நிலூக்கா ஏக்கநாயக்க, ஊவா மாகாண ஆளுனர் எம்.பீ.ஜயசிங்க, பிரதி அமைச்சர்களான அசோக்க அபேசிங்க, அநுராத ஜயரத்ன, மத்திய மாகாண போக்குவரத்து அமைச்சர் எதிரிவீர வீரவர்தன, மத்திய மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவரும் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளருமான எரிக் வீரவர்தன மற்றும் பேருந்து சங்கங்களின் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.

By

Related Post