இங்கிலாந்தில் ஷரன் கிராண்ட் என்பவர் தனது 37 வயதில் முதன்முறையாக கருவுற்றார். ஏழு மாதக் கருவை ஸ்கேன் செய்து பார்த்தபோது, ஐந்தாவது மாதத்தில் இருந்தே கருவில் குழந்தை வளராமல் போன அதிர்ச்சித் தகவல் கிடைத்தது. இதையடுத்து, உடனடியாக அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தையை உயிருடன் மீட்டனர்.
இந்த பெண் குழந்தை வெறும் அரை கிலோ எடையுடனேயே இருந்தாள். மேலும், அவளது உடலின் வெப்பம் குறைந்துகொண்டே போனதால், மருத்துவர்கள் அவளை உடனடியாக டெஸ்கோ சாண்ட்விச் பையில் வைத்து அவளது உடல் வெப்பத்தை மேம்படுத்தினர்.
பிறந்த அரைமணி நேரத்திலேயே அவள் இறந்துவிடுவாள் என மருத்துவர்கள் எண்ணினர். எனினும், மருத்துவர்களின் பாதுகாப்பில் இருந்த அவளுக்கு இரு மாதங்களுக்குப் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக உடல் எடை அதிகரிக்கத் தொடங்கியது.
தற்போது பிறந்து ஐந்து மாதங்களுக்குப் பின்னர் பிக்ஸி எனப் பெயரிடப்பட்டிருக்கும் அந்தக் குழந்தையை வீட்டிற்கு அழைத்துச் செல்ல மருத்துவர்கள் அனுமதித்தனர். சுமார் மூன்றரை கிலோ எடையுள்ள பிக்ஸி மற்ற குழந்தைகளுடனோ, உடல்நிலை சரியில்லாதவர்களுடனோ பழகக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரை கிலோ எடையுடன் பிறந்த குழந்தை தற்போது ஆரோக்கியமாக இருப்பது அதிசயமாகவே உள்ளது என பிக்ஸியின் தாயார் பெருமிதம் அடைந்துள்ளார்.