வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட முதலாம் நாள் எனக்கு சாப்பிட உணவு இருக்கவில்லை. நான் பள்ளிவாசலுக்குச் சென்றே உணவு சாப்பிட்டேன்
பள்ளிவாசல்களுக்கும் எமக்குமிடையில் இவ்வாறான ஒரு நல்லுறவு இருக்கிறது என அம்பன்வெல ஞானலோக தேரர் தெரிவித்தார்.
கொலன்னாவை ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்ற வெள்ள நிவாரண பணிகள் தொடர்பான ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது,
வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள கொலன்னாவை மக்களுக்கு நிவாரண உதவிகள் பெரியளவில் வழங்கப்படுகின்றன.
இதேவேளை கொலன்னாவையைப் பார்ப்பதற்குத் தினமும் நிறைய மக்கள் வருகிறார்கள். பாதாள உலக கோஷ்டியினரின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. இதனை ஊடகங்கள் வெளிப்படுத்த வேண்டும்.
மக்கள் ஒற்றுமையாக சகோதர பாசத்துடன் வாழ முற்பட்டாலும் ஊடகங்களே இனவாதத்தைப் பரப்புகின்றன. சிறிய சம்பவங்களை பெரிதுபடுத்துகின்றன. பிரேக்கிங் நியூஸ் என்று இனவாதம் ஏற்படும் செய்திகளை வெளியிடுகின்றன. குறிப்பாக தனியார் ஊடகங்களே மக்களின் ஒற்றுமையைச் சீரழிக்கின்றன.
ஆனால் பெரும்பான்மை மக்களும் முஸ்லிம்களும் மிகவும் ஒற்றுமையுடன் வாழ்கிறார்கள். அவர்களுக்குள் முரண்பாடுகள் இல்லை. பள்ளிவாசல்களுடன் எமக்குத் தொடர்புகள் இருக்கின்றன.
நேற்றும் நாம் பள்ளிவாசலுக்கு வந்து நிவாரணப் பொருட்களைப் பெற்றுச் சென்றோம். ஊடகங்கள் இன நல்லுறவைப் பலப்படுத்துவதற்காக பணியாற்ற வேண்டும் என்றார்.
ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட ஊடகவியலாளர் ஒருவர் நிவாரண உதவிகள் பெரும்பான்மை சமூகத்துக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் எவ்வாறு பகிர்ந்தளிக்கப்படுகிறது என வினவியதையடுத்தே ஞானலோக தேரர் ஊடகங்களை விமர்சித்தார்.