பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு பதவி யேற்று 100 நாள்கள் கடந்துவிட்டன.
இந்த மூன்றரை மாதங்களில் மட்டும் 350-க்கும் அதிகமான தமிழக மீனவர்களை கைது செய்ததுடன், அவர்களது 63 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.
பின்னர், மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும் விசைப்படகுகள் விடுவிக்கப்படவில்லை. இதனால் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு செய்வதறியாது தவித்து, பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், இலங்கை சென்றிருந்தபோது தமிழக மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக தான் பேசியதாகவும், அப்போது, எல்லை தாண்டிய காரணத்துக்காக கைது செய்யும் மீனவர்களை விடுவித்துவிடுமாறும், விசைப்படகுகளின் உரிமையாளர்கள் பணக்காரர்கள் என்று கூறி படகுகளை சிறைப்பிடித்து வைத்துக் கொள்ளுமாறும் இலங்கைக்கு ஆலோசனை கூறியதாகத் தெரிவித்தார்.
இந்தக் கருத்தால் கொதித் தெழுந்துள்ள மீனவப் பிரதிநிதிகள் சுப்பிரமணியன் சுவாமியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர் என தி ஹிந்து செய்து வௌியிட்டுள்ளது.
இதுகுறித்து மீனவ நேசக்கரங்களின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ கூறியது:
கைது நடவடிக்கை, விசைப் படகுகள் பறிமுதல் ஆகியவற்றைக் கண்டித்து தமிழக மீனவர்கள் பல்வேறு போராட்டங்களை தொடர்ச்சியாக நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக பிரச்சினை எழும்போதெல்லாம் தமிழக முதல்வரும் கடிதங்கள் வாயிலாக பிரதமர் நரேந்திர மோடிக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார். கைது செய்யப்பட்ட மீனவர்கள் விடுவிக் கப்பட்டாலும், விசைப்படகுகள் விடுவிக்கப்படவில்லை.
இந்நிலையில், விசைப்படகுகள் விடுவிக்கப்படாததன் பின்னணியில், தான் உள்ளதாக சுப்பிரமணியன் சுவாமி ஒப்புக் கொண்டுள்ளார். இதுதான் தங்களது நிலைப்பாடா என்பதை பாஜக அரசு மக்களுக்கு விளக்க வேண்டும்.
மேலும், தமிழக முதல்வரின் நடவடிக்கைக்கு எதிராகவும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை முடக்கிய குற்றத்துக்காகவும் சுப்பிரமணியன் சுவாமியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றார்.
இதே கோரிக்கையை பல்வேறு மீனவப் பிரதிநிதிகளும் வலியுறுத்தி வருவதால் பிரச்சினை தீவிரமடைந்து வருவதாக பிரதிநிதிகள் தெரிவித்தனர்.