-ஊடகப்பிரிவு-
சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றத்தை வென்றெடுப்பதற்கான போராட்டத்தின் ஓர் அங்கமாக, எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கல்முனை மாநகர சபைக்கு சாய்ந்தமருது ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசலினால் களமிறக்கப்படவுள்ள பொது சுயேச்சை குழுவுக்கு, தான் ஆதரவு வழங்க தீர்மானித்திருப்பதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் இப்பிரதேசத்தில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட மாட்டார்கள் எனவும், அக்கட்சியின் பிரதித் தலைவரும், இலங்கை அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் தெரிவித்துள்ளார்.
தனது இந்த நிலைப்பாடு தொடர்பாக, அவர் சாய்ந்தமருது ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் அல்ஹாஜ் வை.எம்.ஹனிபா அவர்களுக்கு பகிரங்க மடல் ஒன்றை எழுதியுள்ளார்.
நான் என்றும் ஊரின் ஆபிலாஷைகளுக்கு முன்னுரிமை கொடுப்பவன். அதனால் வெளிப் பிரதேசங்களில் நான் ஒரு பிரதேசவாதியாக சித்தரிக்கப்படுவதை நீங்கள் அறியாமல் இல்லை. நான் பிறந்த மண்ணுக்கு என்ன விலை கொடுத்தாவது ஓர் உள்ளூராட்சி மன்றத்தை உருவாக்கிக் கொள்வதற்காக பல வருடங்களாக என்னை அர்ப்பணித்து போராடி வருகின்ற நான், இக்கோரிக்கையை மழுங்கடிக்கும் எந்தவொரு செயற்பாட்டிலும் ஒருபோதும் ஈடுபடப்போவதில்லை என்பதை பள்ளிவாசல் நிர்வாகத்தினருக்கு உறுதியளிக்கின்றேன்.
அந்த வகையில் கல்முனை மாநகர சபைக்கு சாய்ந்தமருது பிரதேசத்தில், பள்ளிவாசலினால் முன்னிறுத்தப்படவுள்ள சுயேச்சைக்குழு வேட்பாளர்கள் அனைவரையும் வெற்றியடைய செய்வதற்கு கட்சி பேதத்திற்கப்பால், நானும் ஒரு சாய்ந்தமருது மகன் என்ற ரீதியில் ஒத்துழைப்பை வழங்குவதற்கு தயாராக இருக்கிறேன் என்பதையும் தெரிவித்து கொள்கின்றேன்” என்று கலாநிதி ஏ.எம்.ஜெமீல் குறிப்பிட்டுள்ளார்.