-துறையூர் ஏ.கே.மிஸ்பாஹுல் ஹக்-
சாய்ந்தமருது மக்கள் தங்களது போராட்டத்தின் இன்னுமொரு வடிவமாக, நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சுயேட்சை குழுவொன்றை களமிறக்கியுள்ளனர். இவர்களின் இந்த முடிவு மிகவும் நியாயமானதும், அவசியமானதும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இதேபோன்ற திடமான முடிவை அட்டாளைச்சேனை மக்கள் எடுத்திருந்தால், இன்று அவர்களின் கையில் தேசியப்பட்டியல் இருந்திருக்கும். இதே முடிவை பொத்துவில் மக்கள் எடுத்திருந்தால், இன்று அவர்களின் கையில் தனியான கல்வி வலயம் கிடைந்திருக்கும். சம்மாந்துறை மக்கள் எடுத்திருந்தால், சம்மாந்துறை பிரதேசசபை, நகர சபையாகி இருக்கும்.
சாய்ந்தமருது மக்களின் போராட்டம் இந்தளவு வலுப்பெற மு.கா செய்த அரசியல் முறைமைதான் பிரதான காரணமாகும் (எதிர்வரும் கட்டுரைகளில் அவற்றை விரிவாக பார்க்கலாம்). மு.கா வானது சாய்ந்தமருது போராட்டத்துக்கு உதவாது போனாலும், உபத்திரம் செய்யாமலாவது இருக்கலாம். அந்த மக்கள் எடுத்திருக்கும் சுயேட்சை முடிவுக்கு எதிராக செயற்படாமல் ஒதுங்கியிருக்க வேண்டும். அகில இலங்கை மக்கள் காங்கிரஸானது சாய்ந்தமருது சுயேட்சை குழுவின் செயற்பாடுகளுக்கு பூரண ஆதரவை வழங்கியுள்ளது (சிராசை களமிறக்கியுள்ளது தொடர்பாக விரிவான கட்டுரையொன்றில் ஆராயலாம்). அங்கு எந்த தேர்தல் பிரச்சாரங்களிலும் ஈடுபடப் போவதில்லை என்ற முடிவையும் எடுத்துள்ளது.
கல்முனை மாநகர சபைக்கு உட்பட பிரதேசத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சாய்ந்தமருதிலேயே அதிக ஆதரவாளர்களை கொண்டுள்ளது. இந்நிலையில், அவர்கள் சாய்ந்தமருது தேர்தல் நடவடிக்கைகளிலிருந்து ஒதுங்குவது, அவர்களின் வெற்றியின் சாதக தன்மையை குறைக்கும். அப்படி இருந்தும், அவர்கள் சாய்ந்தமருது ஊரின் தேர்தல் செயற்பாடுகளில் இருந்து ஒதுங்கியிருப்பதானது, தங்களது வெற்றியை விட சாய்ந்தமருது மக்களின் போராட்டத்துக்கு முன்னுரிமை வழங்குவதை எடுத்துக்காட்டுகிறது. இது ஒரு வகையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சாய்ந்தமருது மக்களின் போராட்டத்தில் பங்கெடுப்பதாகவும் நோக்கலாம்.
இருந்த போதிலும், மு.காவானது அங்கு தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுத்துள்ளது. இது சாய்ந்தமருது மக்களின் போராட்டத்தை நேரடியாக கொச்சைப்படுத்தும் செயலாகும். அந்த மக்கள் வீதிகளில் படுத்துறங்கி போராடிய போது, அது தொடர்பில் சிறிய கருத்துக்களை கூட தெரிவிக்காத மு.கா, தற்போது இவ்வாறு செய்திருப்பது மிகவும் தவறானதாகும். அந்த மக்களை ஒரு ஏமாளி மக்களாக மு.காவினர் பார்க்கின்றார்களோ தெரியவில்லை. முஸ்லிம் காங்கிரஸானது இந்த போராட்டத்தின் ஒரு அங்கமாக செயற்பட வேண்டும். குறைந்தது நேரடி அரசியல் செயற்பாடுகளை விட்டும் தவிர்ந்திருக்கலாம்.
எப்படி மு.கா சாய்ந்தமருது மக்களின் போராட்டத்தை கௌரவப்படுத்தும். சாய்ந்தமருது மக்கள் தனியான உள்ளூராட்சி மன்றத்தை பெறுவதை தடை செய்ததில் பிரதானமானவர்கள் மு.காவினர் தானே! பாராளுமன்றத்தில் வைத்தே, அக் கட்சியின் தலைவர் அமைச்சர் ஹக்கீம், இரு ஊரார்களும் முஸ்லிம்களாக இருந்தும் பிரித்து கேட்கின்றார்கள் என சாய்ந்தமருது மக்களின் நியாயமான போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் கூறியிருந்தார். இவரிடம் எப்படி சாய்ந்தமருது மக்களின் போராட்டத்துக்கு கௌரவத்தை எதிர்பார்க்கலாம்.
இவற்றிலிருந்து, நாம் இன்னுமொரு முக்கிய விடயத்தையும் அறிந்துகொள்ள முடியும். அமைச்சர் ஹக்கீம் தலைவராக அறிவிக்கப்பட்ட ஊர் சாய்ந்தமருதாகும். அந்த ஊருக்கே மு.காவின் தலைவர் அமைச்சர் ஹக்கீம் இத்தனை துரோகமிழைத்தால், ஏனைய ஊரார்களுக்கு என்ன செய்வார். ஏனைய ஊரார்களுக்கு என்ன தான் செய்துள்ளார்? அந்த மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து, பள்ளிவாயல் மூலம் எடுக்கப்பட்ட முடிவை மதிக்கத் தெரியாதவர், எப்படி ஒரு சமூகத்தின் தலைவராக இருக்க தகுதியானவர்? இவர் எப்படி ஏனையோரின் கருத்துக்களை மதிப்பார்?
தற்போது, அங்கு மு.கா வேட்பாளர்களின் வீடுகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனை மு.காவினர் தான், திட்டமிட்டு செய்தார்களோ தெரியவில்லை. அல்லாது போனால், யாருமே வீட்டில் இல்லாத போது தாக்குதல் நடத்துவார்களா? எது எவ்வாறு இருப்பினும், இதனை பூதாகரமாக்கி, தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பி, கௌரவமான சாய்ந்தமருது மக்களை, மு.காவினர் காடையர்கள் போன்று காட்ட முற்படுகின்றனர்.
அங்கு ஏதாவது ஒரு கட்சி வேட்பாளர்களை நிறுத்தும் போது பிரச்சினைகள் எழும் என்பது யாவரும் அறிந்த ஒன்றே. இதனை அமைச்சர் ஹக்கீம் அறியாதவருமில்லை. அப்படி இருந்தும் அமைச்சர் ஹக்கீம் வேண்டுமென்றே தனது கட்சி வேட்பாளர்களை சாய்ந்தமருதில் களமிறக்கி, சாய்ந்தமருது மக்களை வம்புக்கு இழுத்துள்ளார். மு.காவினரைப் போன்று (அமைச்சர் ஹக்கீம்) சாய்ந்தமருது மக்களின் போராட்டத்தை வேறு யாராலும் கொச்சைப் படுத்த முடியாது. இதனை சாய்ந்தமருது மக்களும் நன்கு அறிந்து கொண்டுள்ளார்கள். இன் ஷா அல்லாஹ் இத்தேர்தலில் பாடமும் புகட்டுவார்கள்.