– நவாஸ் சௌபி –
முஸ்லிம் காங்கிரஸின் இதயமாக இருந்த சாய்ந்தமருது மண் எதிர்வருகின்ற தேர்தலில் மரத்தை அடியோடு பிடிங்கிவிட்ட செய்தியை இந்த உலகிற்கு அறிவிக்கும். அத்தோடு முஸ்லிம் காங்கிரஸின் கோட்டையான கல்முனைத் தொகுதியும் படுதோல்வியடைவதற்கு இந்த மாற்றம் வழிவகுக்கும் என கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மயில் சின்னத்தில் போட்டியிடும் 5 ஆம் இலக்க வேட்பாளருமான சிராஸ் மீராசாஹிப் தெரிவித்தார்.
சனிக்கிழமை 25.07.2015 ஆம் திகதி சாய்ந்தமருதில் திறந்து வைக்கப்பட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மாவட்ட தேர்தல் கிளை திறந்து வைக்கும் நிகழ்வில் இந்த துணிச்சலான கருத்தை மிகவும் உரத்த குரலில் அவர் முழக்கமிட்டு தெரிவித்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் அவர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் அவர் மேலும் முழங்குகையில்
இந்த மண் இதுவரை முஸ்லிம் காங்கிரஸுக்கு அளித்துவந்த வாக்குகளுக்கு அக்கட்சி இந்த மண்ணுக்குத் தொடர்ச்சியான துரோகங்களையே செய்துவந்துள்ளது.
அதற்கு முதல் பலி நான். இரண்டாவது பலி மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் நாங்கள் இரண்டுபேரும் இணைந்துள்ள இந்த சக்தி முஸ்லிம் காங்கரஸ் என்ற கட்சியை இந்த மண்ணிலிருந்து முற்றாக ஒதுக்கிவிடுகின்ற பெரும் சக்தியாகவே இருக்கும்.
இந்த மண்ணும் மக்களும் எங்களுடன் இருக்கின்றார்கள் தொடர்ந்தும் எங்களை அடிமைகளாக்குகின்ற ஒரு அரசியலை இந்த மண்ணிலே இனியொருபோதும் நாங்கள் உருவாக்க இடமளிக்கமாட்டோம் என்ற பிரகடனத்தை சாய்ந்தமருதுவில் பிறந்த ஒவ்வொரு மகனும் செய்துகொண்டிருக்கின்றரார்கள். இந்தப் பிரகடனமே இந்த மண்ணினுடைய ஏகோபித்த முடிவாக ஒலித்துக்கொண்டிருக்கின்றது. எனவும் அவர் தனது துணிச்சலான அரசியலை தனது பேச்சில் வெளிப்படுத்தினார்.