கல்முனை தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக மாநாட்டின் போது அவர் மேலும் கூறியதாவது,
சாய்ந்தமருதுக்கான பிரதேச சபை வழங்கப்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்தில்லை. எவ்வாறு சாய்ந்தமருதுக்கான பிரதேச சபை வழங்கப்பட வேண்டும் என அம்மக்களால் நீண்ட காலமாக கோரப்படுகிறதோ அதே போல் கல்முனை தமிழ் பிரதேச உப செயலகத்தை பிரித்து தரும்படி தமிழ் மக்கள் கோரிக்கை விடுத்துக்கொண்டிருக்கின்றனர்.
இப்படியானதொரு சிக்கலான நிலையில் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் வழமையாக முட்டுக்கொடுக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரட்கமருடனும் கிழக்கு மாகாண சபையில் ஒன்றிணைந்து ஆட்சியமைக்குமளவு நெருக்கமான தமிழ் கூட்டமைப்புடனும் பேசி கல்முனையை 87ம் ஆண்டு இருந்தது போல் பிரித்திருக்க முடியும். ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் பிச்சைக்காரனின் புண் போல் சாய்ந்தமருது பிரச்சினையை வைத்து அம்மக்களை ஏமாற்றி வந்தது.
இந்நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் மீது நம்பிக்கையிழந்த சாய்ந்தமருது மக்கள் அமைச்சர் ரிசாதை நாடினர். அவர் இதற்கான முயற்சியில் இறங்கிய போது முஸ்லிம் காங்கிரசும் ஏட்டிக்கு போட்டியாக இதனை கையில் எடுத்தனர்.
அப்போது சாய்ந்தமருது மக்கள் அமைச்சர் ரிசாதா அல்லது ஹக்கீமா என்ற தெளிவான முடிவுக்கு வந்திருக்கலாம். அதனை விடுத்து இரண்டு பக்கமும் இழு பட்டதால் விடயமும் இழு பட்டது.
இப்போது முஸ்லிம் காங்கிரசால் ஏமாற்றப்பட்ட சாய்ந்தமருது மக்கள் எல்லா கட்சிகளும் இங்கு வரக்கூடாது என்பது பிழையான கருத்தாகும். இன்று வரை சாய்ந்தமருதுக்கான பிரதிநிதித்துவம் முஸ்லிம் காங்கிரசில்த்தான் உள்ளது. அ.இ. மக்கள் காங்கிரசுக்கு சாய்ந்தமருதிலோ கல்முனைக்குடியிலோ மக்கள் பிரதிநிதித்துவம் இல்லை. பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர், மாநகர ஆட்சி என அனைத்தும் முஸ்லிம் காங்கிரசின் கையில் உள்ள நிலையில் அ.இ. மக்கள் காங்கிரடையோ அமைச்சர் ரிசாதையோ இது விடயத்தில் பொறுப்புச்சொல்ல முடியாது.
இனியாவது சாய்ந்தமருது மக்களும் கல்முனை மக்களும் இணைந்து எதிர் வரும் உள்ளூராட்சி தேர்தலில் முஸ்லிம் காங்கிரசை தோற்கடித்து புதிய மாற்றத்தை கொண்டு வர வேண்டும்.