நிறுத்திவைக்கப்பட்டிருந்த விமானமொன்றுடன் பஸ் ஒன்று மோதிய சம்பவம் கொல்கத்தாவில் நேற்று இடம்பெற்றது.
கொல்கத்தாவிலுள்ள நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த எயார் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் ஒன்றின் மீது, விமான நிலையத்திற்குள் பயன்படுத்தப்பட்டு வந்த ஜெட் எயார் வேஸ் நிறுவனத்தின் பஸ் ஒன்று மோதியது. நேற்று (4) அதிகாலை 5.25 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றது.
அஸாம் மாநிலத்திலுள்ள சில்சார் நகருக்குப் புறப்படவிருந்த விமானமே இவ்வாறு சேதமடைந்ததுள்ளது.
மேற்படி பஸ்ஸின் சாரதி அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டபோது, உறக்கக் கலக்கத்தினால் விமானத்தின் மீது பஸ்ஸை மோதிவிட்டதாக அவர் கூறியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் இடம்பெற்றபோது விமானத்திலோ, பஸ்ஸிலோ பயணி கள் எவரும் இருக்கவில்லை.
இச்சம்பவத்தினால் எவருக்கும் காயமேற்படவில்லை. ஆனால், சுமார் 800 கோடி ரூபா பெறுமதியான மேற்படி விமானம் கடுமையாக சேத மடைந்துள்ளதாக எயார் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.