நாட்டின் சிகரட் பாவனையை கட்டுப்படுத்தும் நோக்குடன் சிகரட்டின் வரி அறவீட்டு முறைமையில் திருத்தம் செய்யப்படவுள்ளது. இதற்கமைய அடுத்த வருடத்திற்கான வரவு செலவு திட்டத்தின் மூலமாக சிகரட் விலையை 45 ரூபாவாக அதிகரிக்கவுள்ளதாக அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் நிலங்க சமரசிங்க தெரிவித்தார்.
இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் யோசனை முன்வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. புள்ளி விபரங்களின் பிரகாரம் இதுவரை காலப்பகுதியில் 15 வயதுக்குட்பட்டவர்களில் 70 ஆயிரம் பேர் சிகரெட்டிற்கு அடிமையாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் நிலங்க சமரசிங்க கேசரிக்கு தகவல் அளிக்கையில்,
எமது நாட்டில் பத்தில் 7 பேர் தொற்றா நோய் மூலமே இறக்கின்றனர். அல்லது பாதிப்புக்குள்ளாகின்றனர். அதற்கு அடுத்தபடியாக மதுப் பழக்கம் மற்றும் வாகன விபத்துக்கள் மூலம் உயிரிழக்கின்றனர். அதனால் தான் இன்று நாட்டில் போதைப்பொருள் வர்த்தகத்தை முறியடிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் யோசனை முன்வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. புள்ளி விபரங்களின் பிரகாரம் இதுவரை காலப்பகுதியில் 15 வயதுக்குட்பட்டவர்களில் 70 ஆயிரம் பேர் சிகரட்டிற்கு அடிமையாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டின் தனிநபர் வருமானம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தற்போது இலங்கையின் தனிநபர் வருமானம் 4000 அமெரிக்க டொலராகும். எனினும் தனிநபரின் வருமானத்திற்கேற்ப சிகரெட் விலையும் அதிகரிக்கப்பட வேண்டும்.
இருந்தபோதிலும் கடந்த பத்து வருட காலப்பகுதியில் தனிநபர் வருமானம் அதிகரித்த போதிலும் சிகரட்டின் விலைகள் அதிகரிக்கப்படவில்லை. இதன்காரணமாக சிகரட்டை குறைந்த விலையில் பெற்றுக் கொள்ள முடிந்தமையினால் சிகரட் பாவனையாளர்களின் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரித்தது. எனவே இனிமேலும் அதற்கு இடமளிக்க முடியாது. சிகரட் புகைப்பதின் ஊடாக பாரிய விபரீதங்கள் ஏற்படுகின்றன. புற்றுநோய் ஏற்படுவதற்கான பிரதான காரணமாக சிகரெட் புகைத்தல் கருதப்படுகின்றது.
இந்நிலையில் சிகரட் பாவனையாளர்களின் எண்ணிக்கை குறைக்கும் நோக்குடன் சிகரட்டிற்கான புதிய வரி அறவீட்டு முறைமை அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதனூடாக சிகரட் பாவனையாளர்களின் எண்ணிக்கையை முடிந்தளவு குறைக்க முடியும் என்று எதிர்பார்க்கின்றோம். இதன்பிரகாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியவுடன் இது தொடர்பிலான கோரிக்கையை நாம் முன்வைக்க திட்டமிட்டுள்ளோம்.
இதற்கமைய அடுத்த வருடத்திற்கான வரவு செலவு திட்டத்தின் போது சிகரட்டின் விலையை 45 ரூபாவாக அதிகரிப்பதற்கு திட்டமிட்டுள்ளோம். இந்த யோசனையை நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடமும் முன்வைக்கவுள்ளோம். நாட்டில் 15 வயதுக்குட்பட்டவர்களில் 70 ஆயிரம் பேர் சிகரட் பாவனைக்கு அடிமையாகியுள்ளனர். எமது நாடு இன்று மதுபான பொருட்கள் விற்பனை மூலம் 130 பில்லியன் வருமானத்தை ஈட்டிக்கொள்கிறது.
அதில் சிகரட் மூலம் 77 பில்லியனும், மதுபானம் மூலம் 53 பில்லியனும் நாட்டிற்கு கிடைக்கின்றது. ஆனபோதிலும் மது பாவனையினால் பாதிப்புக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்காக சுகாதார அமைச்சு மேற்குறித்தது போன்ற இருடங்கு செலவினை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
மதுபாவனை பொருட் களின் விற்பனையினை கட்டுப்படுத்தும் வகையிலான சட்டங்கள் இலங்கையில் இருந்த போதிலும் விற்பனையாளர்கள் மிகவும் சூட்சுமமான முறையில் மாணவர் களை இலக்கு வைத்து தமது வர்த்தகத்தை வெற்றிகரமாக முன்னெடுத்து வருகின்றனர் என்று கூறினார்.