ஆளும் கட்சியின் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனாவிற்கு பிரதமர் பதவியை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுவதற்கு முன்னதாக பிரதமர் பதவியை மைத்திரிபால சிறிசேனாவிற்கு வழங்குமாறு பொலனறுவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது சிரேஸ்ட அமைச்சர்கள் சிலர் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, திஸ்ஸ கரலியத்த, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர். ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படுத்தப்பட உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.
ஜனாதிபதி குடும்ப அரசியலில் ஈடுபட்டு வருவதாக சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்களை பொய்ப்பிக்கும் நோக்கில் பிரதமர் பதவியை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவிற்கு வழங்காது, அமைச்சர் மைத்திரிபால சிறிசேனாவிற்கு வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, தாம் தேக ஆரோக்கியத்துடன் வாழ்ந்து வருவதாகவும் பதவியை வகிக்கத் தயார் எனவும் தற்போதைய பிரதமர் டி.எம். ஜயரட்ன தெரிவித்துள்ளார்.(U)