சிக்கா வைரஸ் தொற்று பரவும் நாடுகளுக்கு பயணிக்கும் இலங்கை சுற்றுலா பிரயாணிகளை அவதானத்துடன் செயற்படுமாறு சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு ம்ககளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
குறித்த வைரஸ் தொற்று இலங்கையில் இது வரையில் கண்டறியப்படவில்லை என அமைச்சின் தொற்று நோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் ஆனந்த அமரசிங்க தெரிவித்துள்ளார்.
எனினும் லத்தீன் அமெரிக்கா வலயத்தின் பிரேசில், கொலம்பியா உள்ளிட்ட 28 நாடுகளில் இந்த வைரஸ் தொற்று பரவியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
டெங்கு காய்ச்சலை பரப்பும் நுளம்பினால் சிக்கா வைரஸ் பரவுவதாக டொக்டர் ஆனந்த அமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக டெங்கு காய்ச்சலுக்கான குணங்குறிகள் சிக்கா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுக்கு காணப்படும் எனவும் விசேட வைத்திய நிபுனர் கூறியுள்ளார்.
காய்ச்சல், எலும்பு மற்றும் மூட்டு வலி என்பன காணப்படுமாயின் உடனடியாக வைத்திய உதவியை பெறுமாறும் சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
கர்ப்பிணிகளுக்கு இந்த வைரஸ் தொற்றுமாயின் கருவிலுள்ள குழந்தையின் வளர்சிக்கு பாதிப்பு ஏற்படும் எனவும் விசேட வைத்திய நிபுணர் கூறியுள்ளார்.
இந்த வைரஸ் தாக்கமானது கருவிலுள்ள குழந்தைகளின் மூளையை தாக்குவதுடன் மரணத்தை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே, இலத்தின் அமெரிக்கா வலய நாடுகளுக்கு செல்வோர் இந்த வைரஸ் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறும், வௌிநாடுகளிலிருந்து நாட்டிற்கு வருகைதந்திருப்போரும் அவதானத்துடன் செயற்படுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வௌிநாட்டிலிருந்து வருகை தந்துள்ளவர்கள், காய்ச்சல் போன்ற நோய்களுக்கு வைத்திய பரிசோதனை பெறும் போது தான் வௌிநாட்டிலிருந்து வருகை தந்திருப்பவர் என்பதை சுட்டிக்காட்டுதல் சிறப்பான விடயம் எனவும் சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் ஆனந்த அமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.