தென்அமெரிக்காவின் முக்கிய நாடான பிரேசில் நாட்டை கொடூர வைரஸ் நோயான ‘ஜிகா’ கதிகலங்க வைத்தது. இந்த நோயால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். இந்த வைரஸ் பெண்களை தாக்கினால், அந்த பெண்களின் கருவில் இருக்கும் குழந்தைகளை பாதித்து குறைபாடு உடன் பிறக்கும் என்பதால் பொதுமக்கள் பெரிதும் அச்சம் அடைந்தனர். ஜிகா வைரஸ் தாக்கும் என்ற பயத்தால் சமீபத்தில் நடைபெற்று முடிந்த ரியோ ஒலிம்பிக்கில் சில வீரர்கள் கலந்து கொள்வில்லை.
இந்நிலையில் இந்த கொடூர வைரஸ் சிங்கப்பூரில் பரவ தொடங்கியுள்ளது. சிங்கப்பூரில் ஜிகா வைரசால் 41 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை மற்றும் தேசிய சுற்றுச்சூழல் அமைப்பு சேர்ந்து கொடுத்த அறிக்கையில் ‘‘41 பேரில் 34 பேர் ஜிகா வைரஸ் பாதிப்பில் இருந்து விடுபட்டுள்ளனர். 7 பேர் ஜிகா வைரஸ் பாதிப்பு அறிகுறியுடன் சிகிச்சை பெற்ற வருகின்றனர்.
அல்ஜூனைத் கிரெசன்ட் பகுதியில் வசித்து வரும் வெளிநாட்டு கட்டுமான தொழிலாளர்கள்தான் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 36 பேர் வெளிநாட்டு தொழிலாளர்கள்தான். மற்ற நான்கு பேர் சிங்கப்பூரைச் சேர்ந்தவர்கள். இவர்கள் 21 வயது முதல் 65 வயது வரை இருக்கும்.
தற்போது அல்ஜூனைத் பகுதியில் வசித்து வரும் சிங்கப்பூரைச் சேர்ந்த 47 வயது பெண்மணி ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளார் ’’ என்று தெரிவித்துள்ளது.