சிங்கள பிரதேசத்தில் நஞ்சற்ற விவசாய செய்கையை செய்கின்றனர். ஆனால் தமிழ் மற்றும் முஸ்லிம் பகுதிகளில் இவற்றை செய்வதற்கு யோசிப்பது கிடையாது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், கடற்தொழில் நீரிய வளத்துறை மற்றும் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
கிராமிய பொருளாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம், விவசாய சங்கங்களுக்கு நீர் இறைக்கும் கருவிகள் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (16) மீராவோடை அமீர் அலி மண்டபத்தில் இடம்பெற்ற போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்-
எதிர்காலத்தில் கல்குடாப் பிரதேசத்திலுள்ள மீன்பிடி மற்றும் விவசாய சமூகங்களுக்கு எவ்வளது உதவிகளை செய்ய முடியுமோ அவற்றையெல்லாம் செய்து தருவோம். எதிர்காலத்தில் கல்குடாப் பிரதேசத்திலுள்ள தமிழ், முஸ்லிம் மக்களின் வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்ளும் வகையில் என்ன வேலைத் திட்டங்களை செய்யலாம் என்று நீங்கள் தெரிவித்தால் அந்த வேலைத் திட்டத்தினை செய்வதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்.
ஊர் ரீதியான பற்று மற்றும் ஊர் அரசியல் மாற்றப்பட வேண்டும் என்ற பற்று இருக்க வேண்டும். என்றோவொரு நாள் உங்கள் பிள்ளைகள் இந்தப் பிரதேசத்தில் அரசியல் தலைமைத்துவத்தை கொடுக்க வேண்டும் என்று நீங்கள் கனவு காண வேண்டும்.
விவசாய சமூகத்தின் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். அந்தவகையில் எதிர்காலத்தில் வாழ்வாதாரத்தை மேம்படுத்தக் கூடிய திட்டங்களை வகுத்து விவசாய விளைச்சலை கூட்டும் விடயத்தில் கவனம் செலுத்தவுள்ளோம்.
விவசாயிகள் புதுவகையான விவசாய உக்திகளை பயன்படுத்த வேண்டும். பொலநறுவை வரை நஞ்சற்ற விவசாய செய்கை தற்போது வந்துள்ளது. நஞ்சற்ற நெற் செய்கைக்கு இலங்கை தொடக்கம் உலக நாடுகள் வரை நல்ல தர நிர்ணயமும், மதிப்பும் உள்ளது.
சிங்கள பிரதேசத்தில் நஞ்சற்ற விவசாய செய்கையை செய்கின்றனர். ஆனால் தமிழ் முஸ்லிம் பகுதிகளில் இவற்றை செய்வது கிடையாது. அதனை செய்வது யோசிப்பது கிடையாது. அவசரமாக வேலைகளை செய்கின்றோம். எனவே நஞ்சற்ற விவசாய செய்கைக்கு சந்தையில் நல்ல மதிப்பு உள்ளதால், இந்த நஞ்சற்ற விவசாய செய்கையை செய்ய அனைவரும் முன்வர வேண்டும் என்றார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மத்திய குழுவின் விவசாய மீன்பிடி அமைப்பாளர் எஸ்.சித்தீக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஓட்டமாவடி பிரதேச செயலாளர் திருமதி.நிஹாரா மௌஜீத், ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரி.அஸ்மி, பிரதேச சபை உறுப்பினர்களான எம்.ஜௌபர், எஸ்.கிருபா, முன்னாள் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட், பிரதேச ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவர் எஸ்.புர்ஹான், ஓட்டமாவடி பிரதேச செயலக திட்டப் பணிப்பாளர் எம்.றுவைத் உட்பட பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது கிராமிய பொருளாதார அமைச்சின் நாற்பது இலட்சம் நிதி ஒதுக்கீட்டின் மூலம் கல்குடாப் பிரதேசத்திலுள்ள பத்தொன்பது விவசாய சங்கங்களுக்கு 54 நீர்பம்கள் வழங்கப்பட்டதுடன், விவசாய சங்கத்தினரால் பிரதியமைச்சர் அமீர் அலி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.