சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் இறுதி நூற்றாண்டு இதுவென அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இன்னும் சில தசாப்தங்களில் சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் எதிர்நோக்கிய நிலைமை இலங்கையிலும் ஏற்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சிங்கள மக்களின் வருடாந்த சனத்தொகை அதிகரிப்பு வீதம் 0.74 வீதமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
சிங்கள மக்களின் சனத்தொகை இரட்டிப்பாக உயர்வடைதற்கு இன்னமும் 160 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியேற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச பாடசாலைகளின் தோற்றத்தினால் சிங்கள பௌத்த கலாச்சாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். வெளிநாட்டுப் பிரஜைகள், ராஜதந்திரிகளின் பிள்ளைகளுக்காகவே சர்வதேச பாடசாலைகள் உருவாக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இலங்கையில் 400,000 மாணவ மாணவியர் சர்வதேச பாடசாலைகளில் கல்வி கற்று வருவதாகத் தெரிவித்துள்ளார். பிள்ளைகளின் கல்விக்காக பெற்றோர் தங்களது வருமானத்தின் அரைவாசியை செலவிடுவதாகத் தெரிவித்துள்ளார்.
மக்கள் தங்களது தாய்மொழியை கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை எனவும் கலாச்சாரப் பண்புகளை வளர்த்துக்கொள்வதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலவசக் கல்வியின் மூலம் பல்வேறு விடயங்கள் சாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.