Breaking
Thu. Oct 31st, 2024

கூரகல பள்ளிவாசலை தகர்த்து அந்த இடத்தில் புத்தர் சிலை ஒன்றை நிறுவும் நோக்கோடு அத்துமீறிய சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் உள்ளிட்ட 24 பேருக்கு பலாங்கொடை நீதிவான் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.

நீதிமன்ற கட்டளையை உதாசீனம் செய்து கூரகலயில் வன்முறையை தூண்டும் விதமாக செயற்பட்டமை தொடர்பில்  கல்தோட்டை பொலிஸார் பலாங்கொடை நீதிவான் நீதிமன்றின் மேலதிக நீதிவான்  சுனில் ஜயசேனவிடம் முன்வைத்த அறிக்கைக்கு அமைவாகவே எதிர்வரும் 28ஆம் திகதி மன்றில் ஆஜராக அக்மீமன தயாரத்ன தேரர் உள்ளிட்ட 24 பேருக்கும் அழைப்பாணை விடுக்கப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

கூரகல பள்ளிவாசலை தகர்த்து புத்தர் சிலையொன்றை நிறுவும் நோக்கோடு 20 தேரர்கள் உள்ளிட்ட 200 பேர் கடந்த ஏப்ரல் மாதம் நான்காம் திகதி ஐந்து பஸ் வண்டிகளில் அங்கு சென்றனர்.

இது தொடர்பில் தகவல்களைப் பெற்றுக்கொன்ட கல்தோட்டை பொலிஸார் அவர்கள் கூரகல புராதன முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசத்துக்குள் நுழைவதை தடுத்து பலாங்கொடை நீதிவான் நீதிமன்றில் தடை உத்தரவொன்றை பிறப்பித்தனர். இந்நிலையில் கூரகல பிரதேசத்துக்கு சென்ற சிங்கள ராவய தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் தலைமையிலான குழுவினருக்கு தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசமான பள்ளிவாசல் அமைந்துள்ள பிரதேசத்துக்கு செல்ல முடியவில்லை.

அதற்கு அப்பிரதேச பெரும்பான்மை மக்களும் சிங்கள ராவய அமைப்பினருக்கு எதிர்ப்புத் தெரிவித்து இனவாதத்தை தூண்ட வேண்டாமெனவும் அமைதியாகவும் நிம்மதியாகவும் வாழும் இரு சமூகத்தவரையும் பகைமை கொள்ளச் செய்ய வேண்டாம் எனவும் கூறி வீதிகளில் டயர்களையும் எரித்து குறித்த அமைப்பினர் கூரகலைக்குள் நுழைவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இந்நிலையில் கூரகலைக்கு செல்லும் பாதையில் வீதித் தடையினை ஏற்படுத்திய பொலிஸார் நீதிமன்றின் தடை உத்தரவை சிங்கள ராவய தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் உள்ளிட்டவர்களிடம் கையளித்தனர். எனினும் அவர்கள் அதனை ஏற்க மறுத்து அப்பிரதேசத்துள் அத்து மீற முயற்சித்தனர்.

இதனையடுத்து பொலிஸார் நீர் பிரயோக தாக்குதல் நடத்தி அவர்களை விரட்டியடித்தனர். சிங்கள ராவய அமைப்பினருடன் குறித்த தினம் சென்றிருந்தவர்கள் சிலர் வெள்ளை துணிகளால் முகத்தை சுற்றி மறைத்துக்கொண்டு இருந்ததுடன் அவர்களின் கைகளில் பொல்லுகள்,அலவாங்கு போன்ற ஆயுதங்களும் காணப்பட்டன.

இந் நிலையில் குறித்த தினம் நீதிமன்ற கட்டளையை உதாசீனம் செய்து கூரகல தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசத்தில் வன்முறையை தூண்டும் வண்ணம் நடந்து கொண்ண்டார்கள் என பலாங்கொடை நீதிவான் நீதிமன்றின் மேலதிக நீதிவான் சுனில் ஜய¬சே¬ன¬விடம் நேற்று முன் தினம் பொஸார் அறிக்கை தாக்கல் செய்தனர்.

அத்துடன் அக்மீமன தயாரத்ன தேரர் உள்ளிட்டவர்கள் வன்முறையை தூன்டும் வண்ணம் செயற்பட்டதாகவும் கூரகலயைப் பாதுகாக்க ஒன்றுதிரள்வோம் என அப்பகுதி எங்கும் காடுகளிலும் வாசகங்கள் பொறிக்கப்பட்டிருந்த தாகவும் பிரதான பொலிஸ் பரிசோதகர் அதுல பெரேரா அறிக்கையை தாக்கல் செய்து மன்றின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.

இதனையடுத்து பொலிஸார் முன்வைத்த அறிக்கையை கருத்தில் கொண்ட நீதிமன்றம் சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் உள்ளிட்ட 24 பேரை எதிர்வரும் 28 ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுத்தது.

Related Post