கடந்த 3 கிழமைகளாக சிரியாவின் முக்கிய எல்லை நகரமான கொபானே இனைக் கைப்பற்றும் நோக்கில் கடும் சண்டையில் ஈடுபட்டு வரும் IS போராளிகள் வசம் கொபானே நகர் வீழ்ந்து விடும் அபாயம் உள்ளதென துருக்கி எச்சரித்துள்ளது.
மேலும் கொபானே IS வசம் வீழ்ந்து விட்டால் அது IS களுக்கு ஒரு முக்கிய வெற்றியாக கருதப் படும் எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது.
செப்டம்பர் மத்தியில் இருந்து கொபானே நகரைக் கைப்பற்ற நடந்த கடுமையான மோதல்களில் இதுவரை 412 பேர் கொல்லப் பட்டிருப்பதாகவும் இதில் அரைவாசிப் பேருக்கும் அதிகமானவர்கள் IS கள் எனவும் சிரியாவில் பிரிட்டனைத் தளமாகக் கொண்டு இயங்கி வரும் மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும், இத்தாக்குதல்களின்போது சிரியாவின் கிழக்கு பகுதியில் உள்ள 3 மாவட்டங்களை IS கைப்பற்றி இருப்பதுடன் கொபானே நகருக்கு அண்மையில் மிஸ்தெனூரில் உள்ள மலையில். தமது கொடியையும் பறக்க விட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த இரவு தொடக்கம் கொபானேயில் IS இலக்குகளைக் குறி வைத்து அமெரிக்கா மற்றும் கூட்டணி நாடுகள் விமானத் தாக்குதலைத் தொடுத்து வருகின்றனர். விமானத் தாக்குதல்கள் மற்றும் IS இற்குப் பயந்து கொபானே மக்கள் மற்றும் குர்து போராளிகள் அருகே உள்ள துருக்கி நாட்டுக்கு அகதிகளாக பெரும் எண்ணிக்கையில் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.
இதேவேளை தமது அயல் நாடான சிரியாவில் IS அச்சுறுத்தலை எதிர்த்துப் போராட துருக்கி முன் வராது அலட்சியத்துடன் உள்ள காரணத்தால் கொதிப் படைந்த மக்கள் அங்கு இன்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தை அடக்க முயற்சித்தபோது போலிசாருக்கும் மக்களுக்கும் இடையே ஏற்பட்ட கைகலப்பு வன்முறையாக மாறியதில் தென்கிழக்கு துருக்கியில் ஒருவர் பலியாகியுள்ளார்.,
மேலும், ஞாயிற்றுக் கிழமை கொபானே நகருக்கு அருகே இருந்த IS நிலை ஒன்றின் மீது குர்து இனப் பெண் போராளி ஒருவர் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நிகழ்த்தியிருந்ததில் சில IS போராளிகள் கொல்லப் பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. மறுபுறம் ஈராக்கில் உள்ள IS இலக்குகள் மீது விமானத் தாக்குதலில் ஜேர்மனின் டச்சு படைகளும் சமீபத்தில் இணைந்து IS மீதான போரில் குதித்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.