Breaking
Tue. Dec 24th, 2024

சிரியாவில் தீவிரவாதம் முறியடிக்கப்பட்டால் பாராளுமன்றம் மற்றும் அதிபர் தேர்தல்களை முன்கூட்டியே நடத்த அதிபர் பஷர் அல் ஆசாத் முடிவு செய்துள்ளார்.

சிரியாவில் அதிபர் பஷீர் அல்-ஆசாத்துக்கு எதிராக கடந்த நான்காண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இந்தப் போரின் விளைவாக இதுவரை 2 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், அங்கு தொடர்ந்து போர் நடைபெறுவதால் வாழ வழியின்றி பல லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக வெளியேறி ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

உள்நாட்டு போருக்கிடையே அங்கு ஐ.எஸ். களின் ஆதிக்கமும் பெருகியுள்ளது. சிரியாவின் பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றிய ஐ.எஸ்.  அதனை இஸ்லாமிய நாடாக அறிவித்துள்ளனர்.

ஐ.எஸ். கள், அல்நுஸ்ரா அமைப்பினரை ஒடுக்குவதற்கு அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகள் வான்வழித்தாக்குதல்களை நடத்தி வருகின்றன. அதேநேரத்தில், அமெரிக்கா ஆதரவளிக்கும் கிளர்ச்சி குழுக்கள் மற்றும் ஐ.எஸ். களுக்கு எதிராக ரஷ்யா, ஜோர்டான் ஆகிய நாடுகள் இணைந்து வான்வழித் தாக்குதலை நடத்தி வருகின்றன.

கடந்த ஒருமாத காலத்துக்கும் மேலாக ரஷ்யா நடத்தி வரும் விமானத் தாக்குதல்களை பயன்படுத்தி சிரியா ராணுவம் படிப்படியாக முன்னேறி கிளர்ச்சியாளர்கள் மற்றும் ஐ.எஸ். வசம் உள்ள நகரங்களை மீட்பதில் முன்னேற்றம் கண்டுவருகிறது. இதனிடையே, சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் புறநகர் பகுதியான ஜோபர் நகரம் கிளர்ச்சிக் குழுவினரின் வசப்பட்டுள்ளது.

இந்த உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வந்து மக்கள் அமைதியாக வாழவேண்டுமானால், அதிபர் ஆசாத் பதவி விலக வேண்டும் என அமெரிக்கா, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், இதற்கு அவர் மறுத்து வருகிறார்.

எனவே, ஆசாத்துக்கு எதிராக போரிடும் கிளர்ச்சியாளர்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்க அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் முடிவு செய்துள்ளன.அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரி, சமீபத்தில் சவுதி அரேபியா நாட்டுக்குச் சென்றார். அங்கு மன்னர் சல்மான் மற்றும் துணை பட்டத்து இளவரசர் மற்றும் வெளியுறவுத்துறை மந்திரியை சந்தித்தார்.

துருக்கி மற்றும் ரஷியாவுக்கும் அவர் சென்று வந்தார்.  சவுதி அரேபியா சென்று திரும்பிய  பின்னர், அமெரிக்க அரசு விடுத்துள்ள அறிக்கையில் சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்காவும்,  சவுதி அரேபியாவும் தொடர்ந்து உதவி செய்வது என தீர்மானிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிபர் ஆசாத்துக்கு ரஷியா ஆதரவு அளித்துள் ளது. ஐ.எஸ். கள் மீது குண்டு வீசுவதாக கூறிக்கொண்டு கிளர்ச்சி யாளர்களை அழிப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டி யுள்ளது. இதற்கிடையே உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டுவர சிரியாவில் பாராளுமன்றம் மற்றும் அதிபர் தேர்தல்களை நடத்த அதிபர் ஆசாத் முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த தகவலை ரஷிய எம்.பி. அலெக்சாண்டர் யுஷ்சென்கோ தெரிவித்துள்ளார். டமாஸ்கசில் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர், ’தீவிரவாதிகள் தோற்கடிக்கப்பட்டால் சிரியாவில் அதிபர் ஆசாத் பொதுத்தேர்தல்களை நடத்த முடிவு செய்துள்ளார். அதில், மீண்டும் போட்டியிடவும் அவர் தயாராக இருக்கிறார். இந்த தேர்தலில் அனைத்து அரசியல் கட்சிகளும் பங்கேற்க வேண்டும்’ என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

By

Related Post