கிரீஸ் நாட்டின் கடலோர பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த காவலர் ஐம்பத்தெட்டு சிரிய அகதிகளுடன் சென்ற காற்றடைத்த படகை கவிழ்க்க முயன்ற வீடியோ துருக்கி அரசால் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
கூரிய முனை கொண்ட ஈட்டியால், சிரிய நாட்டு அகதிகளின் படகை வேண்டுமென்றே சேதப்படுத்திவிட்டார். இதன்பின்னர், கவிழத் தொடங்கிய அந்தப் படகிலிருந்த சிரிய அகதிகளை காப்பாற்றிய துருக்கி அரசு இந்த வீடியோவை சமீபத்தில் பகிர்ந்துள்ளது.
வழக்கமாக தமது பாதுகாப்பு நடவடிக்கைகளைப் வீடியோவாக பதிவு செய்யும் துருக்கி அரசாங்கத்தின் இந்த வீடியோ இணைப்பின் மூலம் கிரீஸ் அரசாங்கம் மறைமுகமாக தஞ்சம் கேட்டுவரும் அகதிகளைப் புறக்கணிப்பது தெரியவந்துள்ளது.
மனித உரிமைகளைப் பாதுகாக்கும் விதமாக உலகெங்கும் செயல்பட்டுவரும், ‘அம்னெஸ்ட்டி இண்டர்நேஷனல்’ என்ற அரசு சாரா அமைப்பு இந்த வீடியோ தமக்கு ஆழ்ந்த வருத்தமளிப்பதாக உள்ளது எனத் தெரிவித்துள்ளது. மேலும், கிரீஸ் நாட்டு அதிகாரிகள் இந்த சம்பவம் தொடர்பாக முறையான விசாரணை நடத்தவேண்டும் எனவும் அம்னெஸ்ட்டி இண்டர்நேஷனல் கோரிக்கை விடுத்துள்ளது.