சிரிய உள்நாட்டுப் போரில் இடம்பெயரும் பெருமளவான அகதிகளில் மிக சொற்பளவு அகதிகளையே அமெரிக்க ஐரோப்பிய யூனியன் நாடுகள் ஏற்பதாக அகதிகளுக்கான இரு சர்வதேச நிறுவனங்கள் கடுமையான விசனம் தெரிவித்துள்ளன.
சர்வதேச மீட்புக் குழு மற்றும் நோர்வேயின் அகதிகள் கவுன்சில் ஆகிய இவ்விரு நிறுவனங்களும் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் சிரியப் போரில் அகதிகளாகி வரும் மக்கள் தமது நம்பிக்கையை முற்றாக இழந்து வருவதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இதனால் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் தமது இந்த அகதிகளை அனுமதிப்பது தொடர்பில் தமது பங்களிப்பை இன்னும் அதிகமாகவும் விரைவாகவும் ஆற்ற வேண்டும் எனவும் குறித்த அறிக்கை தெரிவித்துள்ளது. இதில் மேலும் செப்டம்பர் இறுதி வரை அமெரிக்கா வெறுமனே 166 சிரிய அகதிகளையும், பிரிட்டன் சில நூறு அகதிகளையும் பிரான்ஸ் அரசு 500 சிரிய அகதிகளையுமே அனுமதித்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் சர்வதேச சமூகம் அனைத்தும் இணைந்து மில்லியன் கணக்கான சிரிய அகதிகளில் குறைந்தது 5% வீத மக்களையாவது அனுமதிக்க முன்வர வேண்டும் எனவும் இந்த அகதிகளுக்கான நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. சிரிய யுத்தத்தில் இதுவரை குறைந்தது 3.3 மில்லியன் மக்கள் அகதிகளாக வெளியேறி இருப்பதாகக் கணிக்கப் பட்டுள்ளது.
இதைவிட அதிகளவு சிரிய அகதிகளை அதிகமாக உள்வாங்கி வரும் அதன் அண்டை நாடுகளான லெபனான், துருக்கி, ஜோர்டான் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளும் சமீப காலமாக பாரியளவு அகதிகளைத் திருப்பி அனுப்பத் தொடங்கியதால் சிரிய மக்களின் நிலமை மிக மோசமாகி வருவதாகவும் வியாழக்கிழமை தொண்டு நிறுவனங்கள் சில தெரிவித்துள்ளன.