2011 மார்ச் மாதம் அமைதியான முறையில் சிரியாவில் ஆரம்பித்த மக்கள் புரட்சி உள்நாட்டுப் போராக வெடித்ததில் இதுவரை பலி எண்ணிக்கை 191 000 ஐத் தாண்டி விட்டதாகவும் கடந்த வருடம் பலி எண்ணிக்கை முன்னைய் வருடத்தின் இரு மடங்கை விட அதிகமாக இருந்ததாகவும் வெள்ளிக்கிழமை ஐ.நா இன் மனித உரிமைகள் அலுவலகம் அறிவித்துள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் அலுவலகத்தின் தலைமை அதிகாரி நவிபிள்ளை சிரியாவில் இந்த தீவிர மனிதப் படுகொலை நிகழ்ந்ததற்கு முக்கிய காரணமாக மேற்குலகின் அலட்சியப் போக்கே விளங்குவதாகவும் இவற்றின் பதில் நடவடிக்கை வலிமையானதாக இல்லாதது தான் சிரிய கொலையாளிகள் தமது படுகொலைகளைத் தொடர ஊக்குவிப்பதாக அமைந்திருந்ததது எனவும் விமர்சித்துள்ளார். திருத்தமாகக் கூறுவதானால் சிரிய யுத்தத்தில் பலி எண்ணிக்கை 191 369 எனவும் இதில் 9000 பேர் குழந்தைகள் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. பலியானவர்களில் 80 வீதமானவர்கள் போராளிகள் மற்றும் பொதுமக்கள் அடங்கிய ஆண்களாவர். சராசரியாக மதம் தோறும் 6000 பேர் பலியாகி வந்துள்ளனர். 3 வருடங்களுக்கு மேலாகத் தொடரும் சிரிய யுத்தத்தில் கிளர்ச்சியாளர்கள் சிரிய அதிபர் பஷார் அல் அசாத்தினைப் பதவி விலகச் செய்து ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் அரச படைகளுடன் மோதி வருகின்றனர்.
இக்கிளர்ச்சிப் படையின் பிடியில் பல நகரங்கள் உள்ள அதேவேளை சிரியாவிலும் ஈராக்கிலும் எழுச்சி பெற்ரு வரும் ISIS போராளிகளும் சிரியாவில் ஒரு பகுதியைக் கைப்பற்றி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கியுள்ளனர். இந்நிலையில் உறுதிப் படுத்த முடியாத மேலதிக 52 000 பேரின் உயிரிழப்புக்களும் ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.