Breaking
Mon. Nov 25th, 2024
“கிட்டிய பாடசாலை சிறந்த பாடசாலை” எனும் செயற்திட்டத்தின் கீழ் 7000 பாடசாலைகளைப் புனரமைக்கும் பாரிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்காக 6000 கோடி ரூபா செலவிடப்படவுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது.
இச் செயற்திட்டங்களுக்காக ஒவ்வொரு மாகாணங்களுக்கும் 50 மில்லியன் ரூபா முதல் 400 மில்லியன் ரூபா வரை நிதியொதுக்கப்பட்டுள்ளது. ஆயினும் இச் செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் மேலும் பணவசதிகள் தேவைப்பட்டால் அதிகளவிலான நிதியை ஒதுக்கத் தயாராகவுள்ளதாகவும் கல்வியமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

அறிவு, ஆக்கத்திறன், மற்றும் மனிதநேயமுள்ள சிறுவர்களை உருவாக்கும் நோக்கில் அனைவருக்கும் கல்வியில் சம சந்தர்ப்பம் பெற்றுக் கொடுத்தல் என்னும் தொனிக் கொள்கைக்கு அமைய, அண்மையிலுள்ள பாடசாலையே சிறந்த பாடசாலை என்னும் தேசிய நிகழ்ச்சித் திட்டம் புதிய அரசாங்கத்தின் தனிக் கொள்கையை நிறைவேற்றும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் இவ் நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் புதிய அரசாங்கத்தின் கல்விக் கொள்கையும் அதன் திட்டங்களும் மேலும் பன் மடங்காக அதிகரித்து முன்னிலையிலுள்ளது. மேலும் 2016 – 2020 ஆம் ஆண்டுக்கான நடுத்தர அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டமாகவும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  இவ் எதிர்பார்க்கப்படுகின்ற திட்ட நோக்கங்களுக்காக ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவுகளிலுமுள்ள பாடசாலைகள்  சிறந்த பாடசாலைகள் என்ற வகைக்குள் சேர்க்கப்பட்டது. இதன்மூலம் நகரப் புற பாடசாலைகளில் நிலவும் சன நெருக்கடிகள் குறைக்கப்படுவதுடன் அனைத்துப் பிரதேசங்களிலுமுள்ள அனைவருக்கும், சமமான கல்வி வழங்கப்படும்.

கல்வியில் சிறந்த சமுதாயத்தினரை சமூகத்திற்காக வெளிக் கொணர்வதன் மூலம் நாட்டின் அபிவிருத்தி முன்னேற்றத்தினை நோக்கிச் செல்லும்.  இத்திட்டத்திற்கிணங்க, 04 பிரதான மற்றும் 06 இரண்டாந்தர திட்டங்களின் கீழ் 7000 பாடசாலைகளுக்கான புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் நீர், மின்சாரம், மற்றும் அடிப்படை சுகாதார வசதிகள் உட்பட அனைத்து வேலைத்திட்டங்களும் பூரணமாக நிறைவு செய்யப்படவுள்ளதுடன், திட்ட அபிவிருத்தி, மற்றும் மனித வளங்கள்  தொடர்பிலும் இத்திட்டத்தினூடாக கவனத்திற் கொள்ளப்படவுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் மேல் மாகாணத்தில் நன்மை பெறும் பாடசாலைகளின் எண்ணிக்கை 797 ஆகும். வடமாகாணத்தில் 646 பாடசாலைகளும், வடமத்திய மாகாணத்தில் 539 பாடசாலைகளும், மத்திய மாகாணத்தில் 948 பாடசாலைகளும், ஊவா மாகாணத்தில் 497 பாடசாலைகளும், சப்ரகமுவ மாகாணத்தில் 606 பாடசாலைகளும், கிழக்கு மாகாணத்தில் 708 பாடசாலைகளும், வயம்ப மாகாணத்தில் 673 பாடசாலைகளும், தென் மாகாணத்தில் 649 பாடசாலைகளும் இனங்காணப்பட்டுள்ளன.

இதற்கான அபிவிருத்தி வேலைகள் தற்போது நடைபெறுகின்றன. இவற்றுடன் தோட்டப்புற பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post