Breaking
Mon. Dec 23rd, 2024

-ஏ.எல்.எம். லதீப் –

நெலுந்தெனிய பள்ளிவாசலில் நேற்று நள்ளிரவு இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்தின் பின்னர் நேற்று மாலை (29/05/2016) அமைச்சர் றிசாத் பதியுதீன் இந்தக் கிராமத்துக்கு விஜயம் செய்து பள்ளிவாசல் நிர்வாகிகள், பொதுமக்களை சந்தித்து கலந்துரையாடியதாகவும், பள்ளிவாசளுக்கென கண்காணிப்பு கேமராவை பெற்றுத்தர வேண்டுமென நாம் விடுத்த கோரிக்கையை ஏற்று அதனை நிறைவேற்றித் தருவதாகவும் உறுதியளித்தார் என்று பள்ளிவாயல் தலைவர் ஜனாப் மசூத் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் நள்ளிரவு நடைபெற்ற இந்த சம்பவத்தினால் கிராமத்திலே சிறிய பதட்டம் நிலவியதாகவும், இந்தப் பிரதேசத்தில் சிங்கள, முஸ்லிம் நல்லுறவுக்காக பாடுபட்டு வரும் ரஜ மகா விகாரையின் பௌத்த தேரர் யட்டிகல ஒலுவே விமலரத்ன அவர்கள் பதட்ட நிலையை தவிர்ப்பதற்கு உதவியதாகவும் மசூத் தெரிவித்தார். இந்த விகாராதிபதி இந்தப் பிரதேச மக்களின்  நல் வாழ்வுக்கென அரும்பணியாற்றுவதாகவும், இன நல்லுறவை கட்டியெழுப்புவதில் முக்கிய பங்களிப்பை மேற்கொள்வதாகவும் நாம் அமைச்சரிடம் தெரிவித்தோம்.

எமது கலந்துரையாடலை முடித்துவிட்டு சுமார் நூற்றாண்டுகாலம் பழைமை வாய்ந்த, மழைக் குன்றில் அமைந்துள்ள ரஜா மகா விகாரைக்கு அமைச்சர் சென்று பௌத்த மத குருவுடன் சுமார் அரை மணி நேரம் கலந்துரையாடினார். இன நல்லுறவின் அவசியம் மற்றும் சமூகங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் பற்றி இருவரும் பரஸ்பரம் கலந்துரையாடினர்.

நெலுந்தெனிய பள்ளிவாசலில் அமைச்சரை நாங்கள் சந்தித்தபோது ஊரின் பல்வேறு தேவைகள் பற்றி எடுத்துரைத்தோம். இந்தக் கிராமத்தில் சுமார் 80 குடும்பங்கள் வாழ்வதாகவும், அவர்கள் பல்வேறு கஷ்டங்களுக்கு முகம் கொடுப்பதாகவும் தெரிவித்தோம்.

அத்துடன் இந்தக் கிராமத்தில் வாழும் முஸ்லிம்களுக்கென ஒரு தனியான பாடசாலை இல்லாத நிலையையும் அமைச்சரிடம் கூறினோம். அமைச்சர் இந்த விடயத்தில் கவனம் செலுத்த வேண்டுமெனவும் எடுத்துரைத்தோம்.

என்னதான் சதி முயற்சிகள் நடை பெற்றாலும் ஆவேசப்படாமல் நிதானமாக வாழ்ந்து, உரியவர்களிடம் அது தொடர்பில் அறிவித்து, தகுந்த நடவடிக்கையை மேற்கொள்ளுங்கள் என்று அமைச்சர் ஊர் மக்களுக்கு அறிவுரை வழங்கினார்.

சிங்கள – முஸ்லிம் சமூகத்தை பிரித்து அதன் மூலம் ஆதாயம் பெற சில சக்திகள் அண்மைக் காலமாக முயற்சித்து வருகின்றன. அவ்வாறான ஒரு சிலரின் தூண்டுதலினால் இந்தச் சம்பவம் இடம்பெற்றிருக்க முடியும், எனவே இவ்வாறான பிரச்சனைகளை நிதானமாக அணுகுமாறு அமைச்சர் தெரிவித்தார்.

அமைச்சர் இங்கு வந்தமை எமக்கு மகிழ்ச்சி தருகின்றது. இந்த சம்பவத்தால் கலங்கியிருந்த எமக்கு அமைச்சரின் விஜயம் ஒரு தெம்பையும், தைரியத்தையும் வழங்கியுள்ளது என்று பள்ளிவாசல் தலைவர் மசூத் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது முன்னாள் தலைவரும், பள்ளி நிர்வாக ஆலோசனைக்குழு முக்கியஸ்தருமான கலீலும்சில கருத்துக்களை முன்வைத்தனர்.

z13 z12 z45 (1)

 

By

Related Post