சிறுபான்மை இன மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும் அடித்தளத்தை இழந்ததன் காரணமாகவே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தேர்தலில் தோல்வியைத் தழுவியது எனத் தெரிவித்துள்ள அமைச்சர் ஜோன் செனவிரத்ன, அடுத்த பொதுத் தேர்தலில் சுதந்திரக் கட்சி தலைமையிலான முன்னணியை வெற்றிபெறச் செய்வதற்கான சீரமைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
இரத்தினபுரியில் அண்மையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றும்போதே அமைச்சர் ஜோன் சென விரட்ன இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இங்கு அவர் மேலும் தெரிவித்திருப்ப தாவது,
தேசிய அரசாங்கத்தில் நிபந்தனைகளுடனேயே இணைந்துள்ளோம். எமது கட்சியை பாதுகாத்துக் கொண்டு மக்களுக்கான சேவையை முன்னெடுப்பதே அதன் முக்கிய நோக்கமாகும். ஐந்து வருடங்கள் எதிர்க்கட்சியிலிருந்து கொண்டு வெறுமனமே “எதிர்ப்பு சுலோகங்களை” வெளியிட்டுக் கொண்டிருப்பதை விட அமைச்சுப் பதவியை பெற்றுக் கொண்டு எமது மக்களுக்கான தேவைகளை நிறைவேற்ற வேண்டும். அதுவே எம்முன் உள்ள கடப்பாடாகும்.
இவ்வாறு எமது நடவடிக்கைகளை முன்னெடுப்பதோடு, இந்த இரண்டு வருடங்களுக்குள் எமது கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி அடுத்த பொதுத் தேர்தலில் சுதந்திரக் கட்சி தலைமையிலான முன்னணியை வெற்றி பெறச் செய்வதே எமது இலக்காகும். இதன்போது சிறு கட்சிகளையும் எம்முடன் இணைத்துக் கொள்வோம்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பிளவு படுத்த அல்லது அழிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ ஒருபோதும் துணை போகமாட்டார் என்றார்.