எதிர்வரும் இரண்டு வருடக் காலப்பகுதியில் சிறுநீரக நோய்க்கு அதிகம் முகம் கொடுத்துவரும் பிரதேசங்களில் உள்ள மக்களுக்கு அரசாங்கம் சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொடுப்பதற்கான ஒரு கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
மெதிரிகிரிய தலாகொலவெல ஸ்ரீ சுதர்ஷனாராம விஹாரையில் நேற்று நடைபெற்ற சிறுநீரக நோயாளிகளுக்கான நாளொன்றுக்கு 24,000 லீட்டர் நீரை வழங்கும் இயந்திரமொன்றை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
சிறுநீரக நோயை கட்டுப்படுத்துதல் தொடர்பில் விரிவான தேசிய நிகழ்ச்சித்திட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அதேநேரம், தற்போது சிறுநீரக நோய் வடமேல் மாகாணத்தில் மட்டுமன்றி நாட்டில் மூன்றில் இரண்டு பகுதிக்கு வியாபித்திருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
கடந்த 20 ஆண்டுகளில் சிறுநீரக நோய் கருத்திட்டம் தொடர்பாக வெளியான அறிக்கைகளின்படி சுத்தமான நீரை பெற்றுக்கொள்வதன் அவசியம் தொடர்பிலும் விவசாய நடவடிக்கைகளில் கிருமிநாசினிகளை பயன்படுத்துவதிலிருந்து தவிர்ந்துகொள்ளுதல் மற்றும் அது தொடர்பில் வழங்கப்பட வேண்டிய ஆலோசனைகளும் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.