சிறுபான்மை சமூகத்தின் அரசியல் பலத்தை தகர்ப்பதற்கான பேரினவாத சிந்தனைகளின் வேலைத்திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்
சிறுபான்மை சமூகத்தின் குறிப்பாக, முஸ்லிம் மக்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தைக் குறைப்பதும் அதன்மூலம், சமூகத்துக்காக குரல்கொடுக்கும் பிரதிநிதிகளின் குரல்வளையை நசுக்குவதுமே இவர்களின் உள்ளார்ந்தத் திட்டம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
முசலியில் நேற்று (01) இடம்பெற்ற பல்வேறு நிகழ்வுகளில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் உரையாற்றினார்.
அவர் மேலும் கூறியதாவது,
“வரவிருக்கின்ற பொதுத் தேர்தல் சிறுபான்மை சமூகத்தைப் பொறுத்தவரையில், பல்வேறு சவால் மிகுந்ததாக இருக்கப்போகின்றது. நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் நமது சமுதாயம், தடைகளையும் முட்டுக்கட்டைகளையும் தாண்டி தமக்கான பிரதிநிதித்துவத்தைப் பெறவேண்டிய நிலையில் இருக்கின்றது.
எந்த வழியிலாவது, என்ன விலை கொடுத்தாவது மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுவதற்கான பேரினவாத சக்திகளின் முயற்சிகளுக்கு நாம் வழிவிட்டோமேயானால், அதற்காக எதிர்காலத்தில் வருந்த வேண்டி நேரிடும். இந்த சக்திகளின் கச்சிதமான வேலைத்திட்டங்களில் நமது சமுதாயம் மயங்கிவிடக் கூடாது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸைப் பொறுத்தவரையில், சிறுபான்மை மக்களின் விடிவுக்காக உழைக்கும் கட்சி. அத்துடன் சிங்கள, தமிழ், முஸ்லிம் ஆகிய மூவின மக்களும் இந்தக் கட்சியின் செயற்பாட்டு அரசியலுடன் இணைந்து பணியாற்றுகின்றனர். எமது கட்சியை அழிப்பதற்கும் சிதைப்பதற்குமான சதித் திட்டங்கள் அரங்கேற்றப்படுகின்றன. அதன் முதற்கட்டமாகவே, என்னை சிறையில் அடைக்க கங்கணங்கட்டி நிற்கின்றனர். எனது அரசியல் வாழ்வில் நான் எந்தக் குற்றங்களையும் செய்யவில்லை. 19 வருட அரசியல் பயணத்தில் இறைவனுக்குப் பயந்து, சமூகத்துக்காகப் பணியாற்றுகின்றேன். சகோதர தமிழ், சிங்கள மக்களுக்கும் நான் உதவியிருக்கின்றேன். என்மீது ஏதாவது குற்றங்களைச் சுமத்தி, தண்டனை வழங்க முடியும் என்ற அவர்களின் பிரயத்தனங்கள் தோல்வியுற்றதனாலேயே, சஹரானுடன் சம்பந்தப்படுத்தி விசாரணை செய்கின்றனர். இந்த வழியிலாவது சிறையில் அடைத்துவிட முடியுமென நினைக்கின்றனர். அதன்மூலம் தேர்தலில் நான் போட்டியிடாமல் இருப்பதும் அல்லது எனது வாக்கு வங்கியை குறைப்பதும், நமது கட்சிக்கான ஆதரவுத் தளத்தை உடைப்பதுமே அவர்களின் பிரதான திட்டமாகும்.
தேர்தல் காலம் நெருங்கிவிட்டதால் இந்தப் பிரதேசத்துக்கும் அரசியல் முகவர்கள் படையெடுப்பர். வெளிமாவட்டங்களிலிருந்து இங்கு வரும் இந்த ஏஜெண்டுகள், உள்ளூர் ஏஜெண்டுகளை கைக்குள் போட்டுக்கொண்டு தமது நடவடிக்கைகளை மேற்கொள்வர். முஸ்லிம் பிரதேசங்களிலும் முஸ்லிம் வாக்காளர்கள் செறிந்து வாழும் மவட்டங்களிலும் புதுமுகங்களை களமிறக்கி, ஆசை வார்த்தை காட்டுவர். அப்பாவி மக்களின் மனதை மாற்ற முயற்சிப்பர். அற்பசொற்ப தேவைகளை நிறைவேற்றி வாக்குகளை பெற்றுக்கொள்ள முயல்வர். “தாங்கள் தோற்போம் அல்லது தோற்கடிக்கப்படுவோம்” என தெளிவாகத் தெரிந்துகொண்டும் களமிறங்குவர், தமக்குக் கொடுக்கப்பட்ட வேலையை செய்து முடிக்க இந்தக் கூட்டம் செயற்படும்.
இதன்மூலம் எம்மைத் தோற்கடித்து, பேரினவாதத்துக்கு மேலும் உரமூட்டுவதே இவர்களின் எண்ணம். எனவே, இவர்களின் சதி வலையில் நீங்கள் சிக்கிவிட வேண்டாம்” என்றும் தெரிவித்தார்.
ஊடகப்பிரிவு-