எமது சிறுபான்மை சமூகம் இந்த தேர்தலை தமது வாழ்வின் உயிர் மூச்சாக கருத வேண்டியுள்ளது என தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் நமது வாக்குகளை சமூகத்தினை பாதுகாக்கும் ஆயுதமாக பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார் .
புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாசவினை ஆதரித்து புத்தளம் வெட்டுக்குளம் சந்தியில் செவ்வாய்க்கிழமை இரவு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி தலைமையில் இடம் பெற்ற இந்த கூட்டத்தில் மேலும் அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறுகையில் –
இந்த நாடு சுதந்திரத்திற்கு பின்னர் அமைதியாக இருந்த நிலையில் இங்கு வாழ்ந்த தமிழர்கள் பெரும்பான்மையினரின் அடக்கு முறையினால் இவர்களுடன் இணைந்து வாழ முடியாது என்பதினால் தமக்கான சுதந்திரமானதொரு வாழும் உரிமையினை வேண்டி பல போராட்டங்களை நடத்தினர்.30 வருட கால யுத்தம் இந்த நாட்டின் எல்லா துறைகளையும் வீழ்ச்சியடையச் செய்தது மட்டுமன்றி இந்த நாட்டின் பிரதான வருமானத்தை பெற்றுத்தரக் கூடிய சுற்றுலாத்துறையும் மிகவும் பின்தங்கிய நிலைக்கு உள்ளாகியுதுடன் சுற்றுலா பயணிகளின் வருகை தடைப்படுத்தப்பட்டது.சமாதானம் ஏற்படுத்தப்பட்ட பிறகு நாங்கள் எல்லோரும் சந்தோஷப்பட்டோம்.இந்த நாடு எல்லாத் துறைகளிலும் அபிவிருத்தியினை அடையப் போகின்றது.நாட்டு மக்கள் மிகவும் அமைதியான ஒரு வாழ்க்கையினை முன்னெடுக்கப் போகின்றார்கள் என்று,அந்த காலத்திலே தான் அமைதியாக இருந்த முஸ்லிம் சமூகத்தினை அடக்கி ஒடுக்கும் வகையில் செல்லாக்காசாக மதிக்கப்பட்ட மதவாதிகள் ஒரு சிலர் அன்றைய பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் செயற்பட்டதனால் தான் அந்த இனவாத சக்திகள் இந்த நாட்டில் அராஜகம் செய்த வரலாற்று பதிவினை நாம் கண்டோம்.
தம்புள்ள பள்வாசலில் முதலாவதாக ஆரம்பித்த இந்த இனவாதிகளின் அட்டகாசம் தொடர்ந்து எல்லா பகுதிகளிலும் வியாபித்து சென்றது.அளுத்கமவில் மிகவும் மோசமான காட்டுமிரண்டித்தனமான அட்டகாசத்தை செய்தார்கள்.அன்றைய சம்பவத்தின் போது நாங்கள் அப்பிரதேசங்களுக்கு சென்று எமது மக்களினை ஆசுவாசப்படுத்தி இந்த தாக்குதல் சம்பவம் வேறு பிரதேசங்களுக்கு பரவ விடாமல் தேவையான நடவடிக்கையினை நாம் எடுத்தோம்.அன்றைய அரசாங்கத்தின் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு செயலாளரிடத்தில் இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கையெடுக்குமாறு எல்லா சந்தர்ப்பங்களிலும் நாங்கள் வேண்டினோம்.ஆனால் அதனை அவர்கள் செய்யவில்லை.இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் ஒரே குழுவினரே தான் என்று தேவையான ஆதாரங்களை கொண்டு போய் நாங்கள் பாதுகாப்பு தரப்பினரிடத்தில் சமர்பித்த போதும்,இவர்களுக்கு எதிராக எந்த வித சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.ஏன் நீங்கள் கைது செய்யவில்லை என்று கேட்டால் மேலிடத்து உத்தரவு என்று சொன்னார்கள்.அப்போது மேலிடத்தில் இருந்தவர்கள் யார் என்று மக்களுக்கு நன்கு தெரியும்.யுத்தம் முடிவுக்கு கொண்டு வந்ததன் பிற்பாடு அவர்களின் பார்வை முஸ்லிம் சமூகத்தின் மீது இருந்தே வந்துள்ளது.இந்த முஸ்லிம் சமூகத்தினை அடக்கி ஒடுக்கும் வகையில் பொதுபல சேனா அமைப்பு செயற்பட்டுவந்தது.இந்த அமைப்பினரின் அலுவலகம் காலியில் திறக்கப்பட இருந்த சம்பவம் தொடர்பில் அன்றைய ஜனாதிபதிடம் கூறினோம்.இதனை திறப்பதற்காக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபய ராஜபக ச செல்லவுள்ளதால் இதனை செய்ய வேண்டாம் என்றோம் .அதற்கு கோட்டபாய ராஜபக்ஷ மறுப்பு தெரிவித்து அந்த அலுவலகத்தினை திறந்து வைத்தார்.அரசாங்கத்தின் அமைச்சராகவும்,ஒரு சமூகத்தின் தலைவராகவும் நாம் அதனை சொன்ன போதும்,அதனை துாக்கி எறிந்த கோட்டபாய நாட்டின் ஜனாதிபதியாக வருவார் என்றால் இந்த நாட்டு சிறுபான்மை சமூகத்தினை அழித்து துவம்சம் செய்துவிடுவார்.
இவ்வாறானதொரு நிலையில் இந்த இனவாதிகளுக்கும்,நீதிக்குமான ஒரு தேர்தல் போட்டி இன்று இடம் பெறுகின்றது.இந்த நாட்டில் ஆயிரம் வருடங்களுக்கு மேற்பட்ட முஸ்லிம் சமூகத்தின் வரலாற்றில் பல இன அழிப்பு சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன.வடக்கில் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டார்கள்,காத்தான்குடியில் பள்ளிவாசலுக்குள் முஸ்லிம்கள் தொழுகையில் இருந்த போது வெட்டிக் கொலை செய்யப்பட்டார்கள்,புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்குள் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்கள்,இது போன்று இன்னும் எத்தனையோ சம்பவங்கள்.ஆனால் இந்த எல்லா சந்தர்ப்பங்களிலும் முஸ்லிம்கள் இறைவனிடத்தில் பாதுகாப்பினை வேண்டினார்களே தவிர் எதிர் தாக்குதலையோ,ஆயுதத்தின் மீது நம்பிக்கையோ கொள்ளவில்லை.எ்ல்லா நிலையிலும் ஜனநாயகத்தின் மீதும்,தாய் நாட்டின் மீதும் பற்றுதி கொண்டவர்களாகவும் ,நாட்டினை பாதுாக்க வேண்டும் என்பதற்காகவும் பல தியாகங்களை செய்த சமூகம் என்பதை நினைவுபடுத்தவிரும்புகின்றேன்.
முஸ்லிம்களின் புனித நோன்பு காலத்தில் கிரீஸ் மனிதன் என்பவரை முஸ்லிம் வாழும் கிராமங்களுக்குள் அனுப்பி முஸ்லிம்களை அச்சுறுத்தியதுடன் அப்பாவி முஸ்லிம்களை கைது செய்து சிறையில் அடைத்து என்னனென்ன அநியாயங்களை செய்ய முடியுமோ எல்லாவற்றையும் செய்தவர் யார் இன்று ஜனாதிபதி வேட்பாளராக வந்துள்ள கோட்டபாய ராஜபக்ஸ என்பதை மறக்க முடியாது.தலை சிறந்த புலனாய்வு பிரினர் இந்த நாட்டில் இருக்கின்றார்கள் என்று கூறுகின்றோம்.இவ்வாறு இருந்தும் இந்த கிரீஸ் மனிதனை கண்டுபிடிக்க முடியாத வராக இந்த பாதுகாப்பு செயலாளர் இருந்தார்.
வைத்தியர் ஷாபி சஹ்ரானின் தாக்குதல் சம்பவத்துக்கு பின்னர் கைதுசெய்யப்பட்டார்.ஏன் கைது செய்யப்பட்டார் பயங்கரவாத தொடர்புடனா? இல்லை,மாறாக 8 ஆயிரம் தாய்மார்களுக்கு கருத்தடை செய்தார் என்ற ஓரு குற்றச்சாட்டினை முன் வைத்தனர்.இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் பொலீஸார் நேர்மையாக நடந்தார்கள்,ஷாபிக்கு எதிரான அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.இவர் நிரபராதி என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.இருந்த போதும் இனவாதமே தமது வாழ்க்கையாக கொண்டுள்ள இன்றைய கோட்டபாயவுக்கு பின்னால் திரியும் இனவாதி விமல் வீரவன்சவும்,அவரது அடி வருடிகளும் குருநாகல் நீதிமன்றத்திற்கு முன்பாக ஷாபியினை விடுதலை செய்யாதே என்று ஆர்ப்பாட்டம் செய்தார்கள்,இந்த நிலையில் இன்று எமது சகோதரர்கள் சிலர் இந்த மொட்டுக் கட்சியின் பின்னால் சென்று தங்களது முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பு கோட்டாபாயவிடத்தில் தான் உண்டு என்று கூவித்திரிகின்றனர்.முஸ்லிம் சமூகத்தினை அழிக்க வேண்டும் என்றும் துடிக்கின்ற இனவெறியாட்டத்தின் முகாமில் பிரதானமானவராக இருக்கும் இந்த ஜனாதிபதி வேட்பாளரையா முஸ்லிம்கள் ஆதரிக்க வேண்டும்.இந்த தேர்தல் அவர்களுக்கு வாழ்வா? அல்லது சாவா? என்கின்ற ஒரு போராட்டமாகும் .துரதிஷ்டம் அவர்கள் இதில் வெற்றி பெறுவார்கள் என்றால் இந்த நாட்டில் இனி ஒரு போதும் ஜனநாயகம் உயிர் வாழாது என்பதை நாம் தெளிவாக கூறுகின்றோம்.
எனவே இன்றைய தேர்தல் காலம் சிறுபான்மை சமூகத்தின் பலப்பரீட்சையாகும்.இந்த இனவாத சக்திகளை ஒட்டுமொத்தமாக தோற்கடிப்பதன் மூலம் தான் எமக்கும்,எமது நாட்டுக்கும் பாதுகாப்பு என்பதை மக்கள் இன்று உணர்ந்து அலை அலையாக சஜித் பிரேமதாசவினை ஆதரிக்க முன் வந்துள்ளனர் .ஒரு சிலர் அற்ப சொற்ப லாபங்களுக்காக மக்களை பிழையாக வழிநடத்த பார்க்கின்றார்கள்.இதற்கு எந்த விட்டுக் கொடுப்பும் செய்யாமல் இனவாதிகளை தோற்கடிக்க எதிர்வரும் 16 ஆம் திகதி அன்னம் சின்னத்தை வெற்றி பெறச் செய்வோம் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் மக்கள் காங்கிரசின் பிரதித்தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான நவவி, முன்னாள் மேல் மாகாண ஆளுநர் ஆசாத் சாலி,அமைச்சரின் இணைப்புச் செயலாளர் இர்ஷாத் றஹ்மத்துல்லா,புத்தளம் நகர சபை முன்னாள் பிரதி மேயர் அலிகான்,முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் நியாஸ்,இளைஞர் அணி அமைப்பாளர் இப்லால் அமீன் உட்பட பலரும் உரையாற்றினார்.
-இர்ஷாத் ரஹ்மத்துல்லாஹ்-.