தொல்பொருளைப் பாதுகாக்க ஜனாதிபதி செயலணியை உருவாக்கியதன் மூலம், தேர்தல் காலத்தில் சிறுபான்மையின மக்களைப் புறக்கணித்துள்ளமையை ஏற்றுக்கொள்ள முடியாதென மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பிரதி அமைச்சருமான அப்துல்லா மஃறூப் தெரிவித்துள்ளார்.
கிண்ணியாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து தெரிவிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“அரசாங்கம் மூவின மக்களையும் புறக்கணித்து, ஜனாதிபதி செயலணியை உருவாக்கி, தேர்தல் காலத்தில் செயற்படுவது அவசியமானதா? அத்தோடு சிறுபான்மை மக்களை புறக்கணித்து இவர்கள் செயற்படுகின்றார்கள்.
அரசாங்கத்தினால் அண்மையில் ஏற்படுத்தப்பட்டுள்ள செயலணியில், பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரத்னவின் தலைமையில், பௌத்த தேரர்கள் உள்ளிட்ட பெரும்பான்மையினத்தவர்களே நியமிக்கப்பட்டுள்ளனர்.
தொல்பொருள் ஆய்வு தொடர்பான காணிகளை பாதுகாக்கும் தோரணையில் வடக்கு, கிழக்கில் காணிகளை அபகரிப்பதற்காக அமைக்கப்பட்ட அமைப்பு என்றே இதனை கருத வேண்டியுள்ளது. இவ்விடயம் சிறுபான்மை சமூகத்தை மிகவும் துன்பத்துக்குள்ளாக்கியுள்ளது.
இந்நாட்டில் சிறுபான்மை மக்களை பிரதிநிதித்துவப்படுத்தாமல், பெரும்பான்மை சமூகத்தைச் சார்ந்த 11 பேர் இச்செயலணியில் நியமிக்கப்பட்டுள்ளமை ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.