பெரும்பான்மைக் கட்சிகள் தமக்குள் இருக்கும் சில வேற்றுமைகளால் முட்டி மோதிக் கொண்டிருந்த போதும், அந்தக் கட்சிகளில் அங்கம் வகிக்கும் பல அரசியல்வாதிகள் சிறுபான்மைச் சமுகங்களை அடக்கி ஆள்வதில் தமக்குள் ஒருமித்த நிலைப்பாட்டையே கொண்டிருப்பதாக மக்கள் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ரிஷாத் பதியுதின் தெரிவித்தார்.
குருநாகல் மாகாணசபை கேட்போர் கூடத்தில் மக்கள் காங்கிரசின் கல்விக் கலாச்சாரப் பிரிவின் ஏற்பாட்டில் ரிஷாத் பதியுதீன் பவுன்டேசன் அனுசரணையில் புலமைப்பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழாவில் பிரதம விருந்தினராக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கலந்து கொண்டார். மக்கள் காங்கிரசின் கல்வி கலாச்சார பணிப்பாளர் டாக்டர் ஷாபியின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் நஸீர், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் இர்பான், இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் அஷார்தீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அமைச்சர் இங்கு உரையாற்றியதாவது.
நமது சமூகம் எந்த எதிர்பார்ப்புமின்றி அமைதியாகவும் நிம்மதியாகவும் வாழ வேண்டும் என்ற ஒரே நோக்கிலேயே நல்லாட்சியைக் கொண்டுவர பங்களித்தது. கடந்த அரசின் இறுதிப் பகுதியில் கடைசிப் பகுதியில் நமது சமூகத்தின் மீது மேற் கொள்ளப்பட்ட அடாவடித்தனங்களின் பிரதிபலிப்பே ஆட்சி மாற்றத்துக்கு வழிவகுத்தது. எனினும் முஸ்லிம் சமூகத்தின் மீது அண்மைக் காலமாக இனவாதிகள் தமது கைவரிசையை மீண்டும் காட்டத் தொடங்கியுள்ளனர். இந்த அரசும் இதனைப் பார்த்துக் கொண்டு வாளாவிருக்கக் கூடாது.
முஸ்லிம் சமூகம் இன்று இக்கட்டான, மிகவும் முக்கியமான காலகட்டத்திலே இருந்துவருகின்றது நாங்கள் இந்த சந்தர்ப்பத்தில் எமக்குள்ளே கட்சி, பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் சமூகத்தின் அபிலாசைகளை பெற்றுக் கொள்வதற்காக ஒருமித்த நிலைப்பாட்டிற்கு வரவேண்டிய தருணத்தில் இருக்கின்றோம். நாங்கள் இதனைக் கருத்திற்கெடுக்காவிட்டால் சமூகம் ஆபத்தான நிலைக்கு தள்ளப்படலாம் என்ற நியாயமான அச்சம் எமக்குண்டு. நாடாளுமன்றத்தில் இருக்கும் 22 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒருமுகத்தோடு செயற்பட வேண்டிய கடப்பாட்டை கொண்டிருக்கின்றனர். இதற்காக நாங்கள் முயற்சிக்கிறோம்.
எடுத்த எடுப்பிலே அரசாங்கத்தை தாறுமாறாக குற்றஞ்சாட்டிக் கொண்டிருப்பதைவிட உள்ளே இருந்து கொண்டு நமது பிரச்சினையை வலியுறுத்தி நமக்குரிய பங்கை பெற்றுக் கொள்வதே சிறந்த வழி முறையாகும். அதற்காக நாம் கோழைச் சமூகமாக இருக்கின்றோம் என்று எவரும் அர்த்தப்படுத்திவிடக்கூடாது.
சுமூதாயத்திற்குரிய கௌரவங்களையும் உரிமைகளையும் பெற்றுக் கொள்வதற்காகவே நாம் கட்சி ஒன்றை ஆரம்பித்தோம். மர்ஹூம் அஷ்ரப் நமக்காக ஆரம்பித்த முஜலிம் காங்கிரஸிலிருந்து காரணங்கள் எதுவுமின்றி நாம் வெளியேற்றப்பட்டதனாலேயே புதிய கட்சியொன்றை ஆரம்பிக்க வேண்டிய நிர்ப்பந்தம் எங்களுக்கு ஏற்பட்டது. புத்தி ஜீவிகளையும், சமூக ஆர்வலர்களையும், சமுதாய உணர்வு கொண்டவர்களையும் அணைத்துக் கொண்டு மேற்கொள்ளும் இந்தப் பயணத்தில் வெற்றி கிடைக்குமென நம்புகின்றோம் எனினும் முஸ்லிம் சமூகப் பிரச்சினைகளுக்காக கட்சிவேறுபாடுகளுக்கப்பால் ஒருமித்தும் செயலாற்றுகிறோம்.
கடந்த் காலங்களில் தேசியக் கட்சிகளில் அங்கம் வகித்த முஸ்லிம் அரசியல்வாதிகள், சமூகத்திற்கு இக்கட்டான பிரச்சினைகள் ஏற்பட்ட போதெல்லாம் வாய்திறக்க முடியாது அடக்கப்பட்டிருந்தனர். இலங்கை – இந்திய ஒப்பந்தத்தில் முஸ்லிம் சமூகத்திற்கு அநியாயம் இழைக்கப்பட்ட போது அந்தக் காலத்தில் அரசில் அங்கம்வகித்த முஸ்லிம் அரசியல்வாதிகள் அதனைத் தட்டிக்கேட்க முற்பட்ட வேளை “நீங்கள் விரும்பினால், அரசில் இருக்கலாம் அல்லாவிடில் வெளியேறலாம்” என்று ஆட்சியாளர்கள் கூறிய கசப்பான வரலாறுகளும் இருக்கின்றன.
கல்வியிலே அடைய வேண்டிய இலக்கை நாங்கள் இன்னும் அடையவில்லை. பெற்றோர்களாகிய நீங்கள் பிள்ளைகளின் விடயத்தில் கவனம் செலுத்துங்கள். கல்வியின் மூலமே நாம் உரிய இலக்கைப் பெற்றுக் கொள்ள முடியும். அத்துடன் பிள்ளைகளை ஒழுக்கமுள்ளவர்களாகவும், சமுதாயத்திற்கு பயனுள்ளவர்களாகவும் வளர்க்க வேண்டிய பொறுப்பு தாய்மார்களாகிய உங்களுக்கு உள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.