Breaking
Sun. Dec 22nd, 2024

சிறுபான்மை சமூகத்தினர் அதிகபடியான வாக்குகளை அளித்தால் தான் நாங்கள் எதிர்பார்க்கும் ஜனாதிபதியை பெற்றுக் கொள்ள முடியும் என இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கும்புறுமூலையில் இந்திய நிதி உதவி மூலம் அமைக்கப்பட்ட காந்தி மாதிரிக் கிராமம் மற்றும் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் அல்மஜ்மா நகரில் அமைக்கப்பட்ட முகைதீன் அப்துல் காதர் மாதிரிக் கிராமம் என்பன மக்களிடம் சனிக்கிழமை கையளிக்கப்பட்டது.

கல்குடாப் பிரதேசத்தில் மக்களிடம் கையளிக்கப்பட்ட வீட்டுத் திட்டத்திற்கான பிரதான நிகழ்வு ஓட்டமாவடி அமீர் அலி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற போது கலந்து கொண்டு மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்-

தற்போது வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தல் இந்த நாட்டில் ஒரு மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்று விரும்புகின்ற தேர்தல். சிறுபான்மை சமூகம் விரும்புகின்ற ஒரு தலைவனைத்தான், சிறுபான்மை சமூகம் ஆதரிப்பவர் தான் இந்த நாட்டில் ஜனாதிபதியாக வரவேண்டும் என்பதை உறுதி செய்து காட்ட வேண்டி உள்ளது.

அமைச்சர் சஜித் பிரேமதாச இந்த நாட்டினுடைய ஜனாதிபதி ஒருவரின் மகன். எதிர்காலத்தில் இந்த நாட்டிற்கு தலைமை தாங்குவதற்கு தகுதியானவர். எனவே எதிர்காலத்தில் எங்களுக்கு தலைமை தாங்குவார் என்ற நம்பிக்கை எங்களிடத்தில் இருக்கின்றது. உங்களிடத்திலும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றேன்.

எதிர்தரப்பினர் மிகவும் சங்கடப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். ஐக்கிய தேசிய கட்சிக்குள் பிளவை ஏற்படுத்த முயற்சித்துக் கொண்டிருக்கின்றார்கள். எங்களுக்குள்ளே முஸ்லிம், தமிழ், கிறிஸ்தவர் என்றும் பிரிவினையை ஏற்படுத்துவதற்கான முனைப்புக்களை செய்து கொண்டிருக்கின்றார்கள்.

எனவே இதில் ஒட்டுமொத்தமாக இருந்து ஐக்கிய தேசிய கட்சியை, அதனோடு போடப்படுகின்ற ஜனாதிபதி வேட்பாளரை, சஜித் பிரேமதாச போன்ற இளைஞனை நாட்டிற்கு தலைவனாக கொண்டுவர வேண்டிய பொறுப்பு எங்களிடத்தில் இருக்கின்றது.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மை சமூகம் முண்டியடித்துக் கொண்டு வாக்களித்தன் காரணமாகத் தான் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க முடிந்தது. ஜனாதிபதியாக்க முடிந்தது. மகிந்தவை வீட்டுக்கு அனுப்ப முடிந்தது. இம்முறை அதற்கு மேல் சென்று அதிகபடியான வாக்குகளை அளித்தால் தான் நாங்கள் எதிர்பார்க்கும் ஜனாதிபதியை பெற்றுக் கொள்ள முடியும் என்பதை சிறுபான்மை சமூகமாகிய நாம் விளங்கி வைக்க வேண்டும்.

நாட்டை காப்பாற்றியவர்கள், எங்களால் தான் ஆள முடியும் என்று சொல்லி வருவார்கள். இதில் நீங்கள் தெளிவாகவும், விழிப்பாகவும் இருக்க வேண்டும். ஐக்கிய தேசிய கட்சியின் ஊடாக இந்த ஜனாதிபதியை பெற்றுக் கொள்ளும் வேலைத் திட்டங்களை எல்லோரும் ஓரே குடையின் கீழ் நிற்க வேண்டும்.

ஒரு சாதாரண குடிமகன் படும் கஸ்டம், வீடில்லா பிரச்சனை, தொழில் வாய்ப்பில்லாத பிரச்சனை, வீதிப் பிரச்சனை இவைகளெல்லாம் நாம் தீர்க்க வேண்டும் என்று சொன்னால், நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற தமிழ் மக்களுடைய பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என்று சொன்னால், நாம் எதிர்பார்த்து இருக்கும் கோறளைப்பற்று மேற்கு, கோறளைப்பற்று மத்தி பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என்று சொன்னால் ஒரு நல்ல அரசியல் தலைவன் வேண்;டும். அந்த தலைவன் தான் ரணசிங்க பிரேமதாசவின் மகன் என்பதை மறந்து விடாதீர்கள்.

யார் மக்களுடைய அபிலாசைகளை, பிரச்சனைகளை தீர்த்து தருகின்ற தலைவன் என்பதை யார் அடையாளப்படுத்துகின்றார்கள் என்பதை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். எங்களது ஆலோசனைகள், அபிலாசைகளை வெளியிடுவதற்கு என்றார்.

இந்நிகழ்வில் வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரமேதாச, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் எச்.ஈ.தரங்ஜித் சிங் சன்து, பாராளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா, ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரி.அஸ்மி, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார், பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச செயலாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட சிரேஷ்ட முகாமையாளர் க.ஜெகநாதன், தேசிய வீடமைப்பு அதிகார சபை அதிகாரிகள், மதகுருமார்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Post