“புத்தெழுச்சிபெறும் பொலன்னறுவை” அபிவிருத்தியில் சிறுபான்மை சமூகங்களும் உள்வாங்கப்பட்டமையானது, ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நன்றிக்கடன் மற்றும் விசுவாசத்தை வெளிப்படுத்தியிருப்பதாக கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
பொலன்னறுவை, தம்பாளை, ஹிலால்புரத்தில் நிர்மாணிக்கப்பட்ட ஜும்ஆ பள்ளிவாசலை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு, நேற்று மாலை (03) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டு, நினைவுக் கல்லுக்கான திரையையும் திரை நீக்கம் செய்து வைத்தார்.
பிரதியமைச்சர் காதர் மஸ்தான், மேல்மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அம்ஜாத், லங்காபுர பிரதேச சபை உறுப்பினர் நசார்தீன் உட்பட சிங்கள, முஸ்லிம் அரசியல் பிரமுகர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
அமைச்சர் ரிஷாட் இங்கு உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது,
“பல்லின சமூகங்கள் வாழும் இந்த நாட்டில் கடும்போக்குவாத சிந்தனையுடன் சிறுபான்மை இனத்தவரை ஒடுக்கி, ஓரங்கட்டும் முயற்சிகள் கடந்த அரசின் காலத்தில் முன்னெடுக்கப்பட்டன. இந்த அநியாயங்களை இல்லாதொழித்து, நிம்மதியாக வாழ்வதற்காகவே எமது சமூகம் மைத்திரிபால சிறிசேனவை ஐனாதிபதியாக்குவதற்கு தீர்மானித்தது. அதற்காக இந்த மக்கள் பட்ட கஷ்டங்களும், தியாகங்களும் எண்ணிலடங்காதவை. தமிழ், முஸ்லிம் உள்ளடங்கிய ஒட்டுமொத்த சிறுபான்மையினமும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, ஜனாதிபதியாக்குவதற்கு முழுப்பங்களிப்பையும் நல்கியிருப்பதை, இந்தப் பள்ளிவாசலில் வைத்து அவரின் முன்னிலையிலேயே பதிவிட விரும்புகின்றேன். அதை எவரும் இலகுவில் மறந்துவிட முடியாது. குறிப்பாக, நான் பிரதிநிதித்துவப்படுத்தும் வன்னிச் சமூகத்தினர் நூறுவீதமான பங்களிப்பை, உங்கள் மண்ணில் பிறந்த ஜனாதிபதிக்கு வழங்கியதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றேன்.
வன்னி மாவட்டத்தில் 32 க்கும் அதிகமான மதகுருமார்கள் முன்னாள் ஜனாதிபதிக்கு விசுவாசமாக செயல்பட்டனர். எனினும், அவர்களுடன் நான் கொண்டிருக்கும் உறவு, அன்பைப் பயன்படுத்தி, எமது சமூகத்தின் ஆதங்கங்களை வெளிப்படுத்தினேன். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்க வேண்டியதன் அவசியத்தை நான் உணர்த்தியதால், வன்னியில் இருந்த சுமார் 21 பௌத்த மதகுருமார்கள் நல்லாட்சிக்காக உழைக்கவும், அவரை ஜனாதிபதியாக்கவும் என்னுடன் சேர்ந்து பாடுபட்டனர்.
ஜனாதிபதி தனது சொந்த முயற்சியினால் மேற்கொண்ட பொலன்னறுவை புத்தெழுச்சி அபிவிருத்திகளை அவராகவே திறந்து வைக்காமல், பல்வேறு கட்சிகளைச் சார்ந்த அமைச்சர்களைக் கொண்டு அங்குரார்ப்பணம் செய்து வைக்கின்றமை, ஐனாதிபதியின் பரந்த மனப்பாங்கையே வெளிப்படுத்துகின்றது. இந்த பரந்த மனப்பாங்கில் சிறுபான்மைச் சமுகங்களுக்கு எதிர்காலத்திலும் விடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்குண்டு. சிறுபான்மையினரின் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையும், விடியலும் வீண்போகக் கூடாது என்பதே எமது மக்களின் பிரார்த்தனைகளாகும். மைத்திரிபால சிறிசேனவை ஐனாதிபதியாக்க முஸ்லிம் தாய்மார்கள் நோற்ற நேன்புகள், கையேந்திக் கேட்ட பிரார்த்தனைகள் எவ்வாறு வீண்போகவில்லையோ, அவ்வாறுதான் ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது முஸ்லிம்கள் வைத்த நம்பிக்கையும் வீணாகிவிடக் கூடாது.
அத்துடன், இந்தப் பள்ளிவாசலின் மிம்பரைப் போன்று, நாட்டிலுள்ள சுமார் 4000 பள்ளிவாசல்களின் மிம்பர்களும் ஜனாதிபதியின் வெற்றிக்காக ஒலித்திருக்கின்றன என்ற செய்தியையும் இந்த இடத்தில் மீண்டும் ஞாபகப்படுத்தி, இந்த நாட்டின் சரித்திரத்தில், நாட்டுத் தலைவர் ஒருவரின் வெற்றிக்காக இவ்வாறு எவருமே ஒட்டுமொத்தப் பங்களிப்பை நல்கிய வரலாறு இல்லை என்பதையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்” இவ்வாறு அமைச்சர் கூறினார்.
-சுஐப் எம்.காசிம்-