Breaking
Mon. Jan 13th, 2025

முஸ்லிம்களின்  ஜனாஸா எரிப்பு தொடர்பில் தாம் மிகவும் கவலையடைவதாகவும், இந்த நாட்டில் வாழும் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் விடயங்களில் கடும்போக்குத் தன்மையினை தளர்த்தி, மென்மையான பார்வையினை அரசாங்கம் செலுத்த வேண்டும் எனவும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தெரிவித்துள்ளார்.

ஜனாஸா எரிப்பு விவகாரம் தொடர்பில், அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,

நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் தற்போதைய அரசாங்கத்திற்கு மக்கள் ஆணையினை வழங்கியுள்ளமையானது, சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் மீது கடும்போக்குத் தன்மையினை பிரயோகிப்பதற்கு அல்ல. மாறாக நல்லதொரு மனிதாபிமானமிக்க ஆட்சியினை வழங்குவதற்காகவே என்பதை ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

இதேவேளை, தேர்தலில் போட்டியிட்ட ஏனைய பெரும்பான்மை வேட்பாளர்களை கொண்ட கட்சிக்கும் மக்கள் வாக்களித்துள்ளமையானது, இன்னும் இந்த நாட்டில் சமமான அரசியல் தீர்மானம் மேற்கொள்ளும்  சுதந்திரத்தன்மை காணப்படுவதையே எடுத்துக்காட்டுகிறது.

“கொரோனா தொற்றும் முஸ்லிம் ஜனாஸாக்களின் எரிப்பும்” என்பது சுகாதார அதிகாரிகளின் தீர்மானத்தின்படி இடம்பெறுவதாக கூறப்பட்ட போதும், சர்வதேச சட்டமானது இதற்கு மாறாக இருப்பதை ஆட்சியில் இருக்கின்றவர்கள் காணாமல் இருக்கின்றார்களா? என மக்கள் கேள்வி கேட்கின்றனர். இதற்கு ஆட்சியாளர்கள் பதில் கூறமாட்டார்கள் என்பதும் மக்களுக்கு தெரியும். முஸ்லிம்களின் ஜனாஸாக்களின் எரிப்பால், எமது உள்ளம் வெகுவாக புண்பட்டுள்ளதை, இந்த அரசாங்கத்துக்கு நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

எடுக்கப்பட்ட தீர்மானங்கள், மனிதர்களால் இயற்றப்பட்ட சட்டங்களுக்கமைவானதால் , இது முழுமையானதொன்றாக இருக்காது என்பதினால் முஸ்லிம் ஜனாஸாக்களை எரிப்பது தொடர்பில், அரசாங்கம் மீள் பரிசோதனை செய்து, எமது தாய் நாட்டின் பற்றினை மேலும், உறுதிப்படுத்துவது ஆட்சியாளர்களின் கைகளில் தங்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Post