இந்தியாவில்பொன்னேரி என்.ஜி.ஓ நகரை சேர்ந்தவர் கைரூன்பீவி (84). இவருக்கு 5 மகன்கள். சொந்த ஊர் மதுராந்தகம் அடுத்த இரண்யசித்தி எனும் கிராமம். இதில், இளைய மகனான ஷேக் இஸ்மாயில், 16 வயதில் திடீரென வீட்டில் இருந்து மாயமானார். பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
கடந்த 48 ஆண்டுகளாக அவரை தேடி வந்தனர். ஆனால், அவரது தாய் மட்டும் மகன் கிடைத்து விடுவார் என்ற நம்பிக்கையில் இருந்தார்.இந்நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு கைரூன்பீவி, தனது கணவர் சாயலில் ஒருவர் வீட்டின் அருகே வந்து நின்றதை கண்டு இன்ப அதிர்ச்சி அடைந்தார். அந்த நபர், கைரூன்பீவியை உம்மா (அம்மா) என்று அழைத்ததை கேட்டதும், 48 வருடங்களுக்கு முன் கடைசியாக கேட்ட தனது மகன் இஸ்மாயிலின் குரல்தான் என அறிந்தார். அவர் அடைந்த ஆனந்தத்துக்கு எல்லையே இல்லை. காணமல் போன தனது சகோதரனை கண்டதும் உடன்பிறந்தோர் மகிழ்ச்சியில் திளைத்தனர்.
இதுபற்றி இஸ்மாயில் கூறுகையில், ‘சிறு வயதில் வீட்டைவிட்டு வெளியேறி மும்பை சென்றேன். சிறிது காலம் இந்திய ராணுவத்தில் பணியாற்றி, ஓய்வுபெற்றேன். தற்போது, குஜராத்தில் எனக்கென ஒரு குடும்பத்தை ஏற்படுத்தி வாழ்ந்து வருகிறேன். இறப்புக்கு முன்னர் தாய் மற்றும் சகோதரர்களை காணவேண்டும் என்ற ஆவலில் மதுராந்தகம் சென்றேன். அங்குள்ள உறவினர்களிடம் விசாரித்தபோது, தாய் மற்றும் சகோதரர்கள் பொன்னேரியில் வசிப்பதாக தெரிவித்தனர். அதன்பின்னரே, இங்கு வந்து தாயை கண்டேன்‘ என்றார்.தன் உயிர் பிரிவதற்குள் காணாமல்போன மகனை காண வேண்டும் என்ற நம்பிக்கையுடன் இருந்தது வீண்போகவில்லை என கைரூன்பீவி கண்ணீர் மல்க கூறினார்.