Breaking
Mon. Dec 23rd, 2024

உலக சிறுவர் தினத்தை சிறப்பிக்கும் வகையில், முசலி பிரதேச செயலகத்துக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான புத்தகப்பை வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (01)  இடம்பெற்றது.

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், வடமாகாண சபை முன்னாள் உறுப்பினரும் அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளருமான றிப்கான் பதியுதீனினால் வழங்கி வைக்கப்பட்டது.

சிறுவர் தினத்தை கொண்டாடும் வகையில், மாணவர்களுக்கு கற்றலுக்கான ஆர்வத்தை தூண்டும் நோக்குடன் நடைபெற்ற இந்த நிகழ்வில், சுமார் 500 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு புத்தகப்பைகள் மற்றும் கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் உரையாற்றிய றிப்கான் பதியுதீன் கூறியதாவது,  

“ஒரு நாட்டில் சுதந்திர தினம் கொண்டாடுவது எவ்வாறு அவசியமானதொன்றோ, அதேபோன்று சிறுவர் தினத்தினை கொண்டாடுவதும் அவசியமாகின்றது. எமது நாட்டின் பொக்கிஷங்கள், எதிர்காலத் தலைவர்கள் இன்றய சிறுவர்களே. நாட்டில் பல பாகங்களில் சிறுவர்களுக்கான வன்முறைகள் அதிகம் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.

படிக்கும் காலங்களில் சிறுவர்களை வேலைக்கு அமர்த்துதல், மன ரீதியாக உடல்ரீதியாக அவர்களை துன்புறுத்துவது போன்றவற்றை நாங்கள் முற்றாக தவிர்த்து, அதற்கெதிராக போராட வேண்டும். இன்று நாங்கள் அவர்களுக்கு எவற்றை கற்றுக்கொடுக்கின்றோமோ, அவைகள்தான் நாளை எம் கண்முன்னே விளைவாக காட்சியளிக்கின்றது. ஒரு மாணவனுக்கு சிறுவயதில் ஒழுக்கத்தை கற்றுக்கொடுத்தால், அவன் எதிர்காலத்தில் ஒழுக்கமுடைய ஒரு சமூகத்தை உருவாக்கக் கூடியவனாக இருப்பான். அதேபோன்று தவறான நடவடிக்கைகளை அவர்களின் மனதில் பதிய வைத்தால், எமது சமூகத்தின் ஒரு கருப்பு புள்ளியாக இருப்பான்.

நாம் எமது எதிர்கால சமூகத்தை இன்றிலிருந்தே வடிவமைக்க வேண்டும். ஒவ்வொரு சிறுவர்களும் சிறந்த ஒருநிலைக்கு வர நாங்கள் திட்டமிட வேண்டும். எனவே ஆசிரியர்கள், மாணவர்களை வழிநடத்த வேண்டும். பெற்றோர்கள், சிறுவர்களை பாதுகாக்க வேண்டும். உங்கள் குழந்தைகளை ஒரு ஒழுக்கமுள்ள, சிறந்த தலைமைத்துவ பண்புடைய தலைமுறையாக உருவாக்க வேண்டும் என கூறினார்.

அத்துடன், ஏனைய பிரதேசங்களிலுள்ள அனைத்து மாணவர்களுக்கும் விரைவில் இவ்வாறான புத்தகப்பைகள் வழங்கி வைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மாகாணப் பணிப்பாளர் முனவ்பர், முசலி பிரதேச சபை உறுப்பினர்கள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் உட்பட பெற்றோர்களும் கலந்துசிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

-ஊடகப்பிரிவு-

Related Post