எம்.எம்.ஜபீர்
தற்போது நாட்டில் அதிகரித்து வரும் சிறுவர் துஷ்பிரயோகம் பெரும்பாலும் உறவினர்களினாலேயே இடம்பெற்று வருவதை காணக்கூடியதாகவுள்ளது. இதுவிடயத்தில் பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
சம்மாந்துறை புளக் ஜே கிழக்கு -03ஆம் பிரிவிலுள்ள நீண்டகால தேவையாக இருந்த மதீனா உம்மா வீதிக்கு குடிநீர்க் குழாய் பொருத்தப்பட்டு வீடுகளுக்கு குடிநீர் பெறக்கூடிய வசதியை ஏற்படுத்திக் கொடுத்தமைக்கு அல்-மபாஸா மகளிர் சங்கம் ஏற்பாடு செய்த நன்றி கூறும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீட உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் இவ்வாறு தெரிவித்தார்.
அல்-மபாஸா மகளிர் அமைப்பின் தலைவி அல்துல் ஹரீம் ஜலீலா தலைமையில் அமைப்பின் காரியாலய வளாகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் மாஹிர் பவுன்டேசன் அமைப்பின் தலைவர் வை.வீ.சலீம், பொறியலாளர் எம்.ஐ.எம்.றிஸாட்கான், எம்.அமீன், மகளிர் அமைப்பின் பிரதிநிதிகள், பொதுமக்கள், முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்
தினமும் காலையில் எழுந்து தொலைக்காட்சி, பத்திரிகை, வானனொலி ஆகியவற்றில் இடம்பெறும் செய்திகளில் சிறுவர் துஷ்பிரயோகம், கொலை, கடத்தல், கற்பளிப்பு போன்ற செய்திகளே அதிகம் காணப்படுகின்றன. எமது குழந்தைகளை சிறுவர்கள் என்று கவனக்குறைவாக இருந்துவிட வேண்டாம்.
இன்று சொந்தக்காரர்கள் என நம்பிவிட்டு அவர்களுடன் பிள்ளைகளை தனியாக அனுப்புவதை தவிர்த்துக் கொள்வது நல்லது. ஏனெனில் இன்று 50 சதவீதமான சிறுவர் துஷ்பிரயோகம் எமது சொந்தக்காரர்களினாலும், உறவினர்களினாலுமே இடம்பெறுகின்றன. எனவே நான் பெற்றோர்களை வினையமாக கேட்டுக் கொள்ளுகின்ற விடயம்தான் உங்கள் பிள்ளைகளை உங்களின் கண்காணிப்பில் பார்த்து கொள்ளுங்கள் அது உங்களின் பிள்ளையின் எதிர்காலத்திற்கு சிறப்பாக அமையும் என தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் மகளிர் அமைப்பின் அங்கத்தவர்களில் மலசலகூடம், மின்சாரம், குடிநீர் இணைப்பு, வாழ்வாதர உதவிகள் தேவையானவர்கள் இருந்தால் அவர்களின் பெயர்களை முன்னுரிமை அடிப்படையில் தருமாறும் முடிந்தால் அல்லது மாற்று வழிகளின் ஊடாக இப் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்று தருவாதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.