இலங்கை சிறுவர்நல விசேட மருத்துவர்கள் சங்கத்தின் 19 ஆவது வருட பொதுக்கூட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று முந்தினம்(11) பிற்பகல் காலிமுகத்திடல் ஹோட்டலில் நடைபெற்றது.
சிறுவர் நோய்களைக் கண்டறிவதற்கும் அந்நோய்களைக் குணப்படுத்துவதற்காகவும் முக்கிய பங்களிப்புகளை வழங்கிய வைத்தியர்களை கௌரவிக்கும் வகையில் பேராசிரியர் ஆசிரி குணவர்த்தனவுக்கும் பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் வைத்தியர் அமித் குப்தாவுக்கும் வைத்தியர் ஸ்ரீனிகா குலரத்னவுக்கும் ஜனாதிபதியினால் விருதுகளும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, இலங்கை சிறுவர்நல விசேட வைத்தியர்கள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் ரம்யா த சில்வா, செயலாளர் வைத்தியர் சுரன்த பெரேரா ஆகியோர் உள்ளிட்ட அச்சங்கத்தின் சுமார் 500 உறுப்பினர்கள் பங்குபற்றினர்.
மேலும் தென்னாசிய ஐக்கிய நாளமில்லா சுரப்பிகள் சங்கமும் (SAFES) இலங்கையின் நாளமில்லா சுரப்பிகள் சங்கமும் (Endocrine society of sri lanka) இணைந்து ஒழுங்கு செய்திருந்த நாளமில்லா சுரப்பிகள் விஞ்ஞானத் துறை தொடர் கொழும்பு கலதாரி ஹோட்டலில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது. இந்த விஞ்ஞானத் துறை கூட்டத்தொடர் மூன்று தினங்கள் கொழும்பில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் பாலித மஹீபால மற்றும் இலங்கை நாளமில்லா சுரப்பிகள் துறை விஞ்ஞான கல்லூரியின் (SLCE) தலைவர் வைத்தியர் உதித புலுகஹபிடிய ஆகியோரும் கலந்து கொண்டனர்.