சிறு கைத்தொழில் முயற்சியாளர்களின் நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு, தாம் உதவி செய்வதற்குத் தயாராக உள்ளதாக – வட மாகாணசபை உறுப்பினரும், சபையின் எதிர்க்கட்சி பிரதம கொரடாவுமான றிப்கான் பதியுத்தீன் தெரிவித்தார்.
தலைமன்னார் நடுக்குடாவில் பனைப் பொருட்களை அடிப்படையாகக் கொண்டு சுயதொழில் மேற்கொள்ளும் பெண்களுக்கான உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு, கடந்த சனிக்கிழமை நடைபெற்றது
பனை அபிவிருத்தி சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந் நிகழ்வில் பிரதம விருந்தினராககக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, றிப்கான் பதியுத்தீன் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்ட;
“மன்னார் மாவட்டம் வளம் நிறைந்தது. இங்கு பனை உற்பத்தியும் உள்ளது. ஆனால் எமது மக்கள் இருப்பதை விட்டுவிட்டு பறப்பதற்கு ஆசை படுவது போன்று, இருக்கின்ற வளங்களை பயன்படுத்தாது இல்லாத எதையோ தேடி அலைக்கின்றார்கள்.
தலைமன்னாரை அண்டிய பகுதியில் பனை மரங்கள் அதிகளவில் காணப்படுகின்றன. ஆனால் அவற்றை யாரும் சரியான முறையில் பயன்படுத்தி பயன்பெறவில்லை. இதனை கருத்தில் எடுத்துக்கொண்ட கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர ரிஷாட் பதியுத்தீன், பல கிராமங்களில் பனை உற்பத்தி தொடர்பான கைத்தொழில்களை உருவாக்கி வருகின்றார்.
அந்தவகையில் உங்கள் கிராமமும் இதில் தெரிவு செய்யப்பட்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. இன்றய காலகட்டத்தில் தொழில் வாய்ப்பு என்பது ஒரு எட்டா கனியாகவே இருக்கின்றது. அரச உத்தியோகம் மட்டுமே செய்வேன் என, எமது காலங்களை வீணடிக்காமல், எம்மைச்சுற்றி இருக்கின்ற வளங்களை பயன்படுத்தி எமது சொந்த முயற்சியில் எமக்கென்று ஒரு தொழிலை நாம் உருவாக்க வேண்டும்.
உண்மையில் சுயதொழில் முயற்சியாளர்களை நான் பாராட்டுகின்றேன். அதுமட்டுமல்லாது நானும் அமைச்சரும் உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருக்கின்றோம். எமது சமூகம் தலை நிமிர்ந்து, தமது சொந்த உழைப்பில் கெளரவமாக வாழவேண்டும். யாரிடமும் கை நீட்டும் நிலைக்கு நாம் மாறிவிட கூடாது.
எனவே உங்களால் முடியுமான ஏதோ ஒரு சிறு கைத்தொழிலை செய்யுங்கள். உங்களுக்கு தேவையான உதவிகளை தாராளமாக எங்களிடம் கேளுங்கள். எமது அமைச்சராக இருந்தாலும், நானாக இருந்தாலும் நீங்கள் வாக்களித்து தெரிவுசெய்யப்பட்டு இன்று ஒரு நல்ல இடத்தில் இருக்கின்றோம். அந்த வகையில் உங்கள் அனைவருக்கும் நாம் நன்றிக்கடன் பட்டவர்கள்.
அரசியல் என்பது நிரந்தரமற்ற ஒன்று. நாங்கள் பதவியில் இருக்கும் வரை உங்களின் எதிர்கால வாழ்வுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தர தயாராக இருக்கின்றோம்” என்றார்.