Breaking
Sun. Dec 22nd, 2024

சிறைச்சாலைகளில் அண்மையில் இடம்பெற்ற தற்கொலைச் சம்பவங்கள் மற்றும் வேறு சில சம்பவங்களையடுத்து, நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் சி.சி.டி.வி கமெரா பொருத்தப்படவுள்ளதாக, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைப்பு, நேற்றுத் திங்கட்கிழமை (19) அறிவித்துள்ளது.

இவ்வாறு அனைத்து சிறைச்சாலைகளிலும் சி.சி.டி.வி கமெரா பொருத்துவதன் மூலம், சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் நடவடிக்கை குறித்து பொலிஸாரால் அவதானமாக இருக்க முடியும் என்று குறித்த அமைச்சு அறிவித்துள்ளது.

இது குறித்து பொலிஸ் மாஅதிபர் பூஜித ஜயசுந்தரவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் இவை சிறைக்கூண்டுக்குள்ளேயே பொருத்தப்படல் வேண்டும் என்றும் அமைச்சு தெரிவித்தது.

பிடியாணை பிறப்பிக்கபட்ட நிலையில் புஸ்ஸல்லாவைப் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு, பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த, புஸ்ஸல்லாவ – ரொத்சைல்ட் தோட்டத்தை சேர்ந்த நடராஜா ரவிச்சந்திரன் (வயது 28) என்ற இளைஞன், சிறைக்கூடத்தில் உயிரிழந்தார்.

இவ்வாறான சம்பவங்களில் இனிவரும் காலப்பகுதியில் இடம்பெறக்கூடாது என்ற காரணத்தினாலேயே, இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறித்த அமைச்சு சுட்டிக்காட்டியது.

இதேவேளை, சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 10 வருடங்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதியொருவர், மாத்தறை சிறைச்சாலையிலுள்ள அறையொன்றிலிருந்து நேற்றுத் திங்கட்கிழமை (19) காலை தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post