இவ்வருடம் சிறைச்சாலைகளை திடீர் சோதனைகள் நடத்தியதில் இதுவரை 73 கையடக்க தொலைபேசிகளும் 54 சிம் அட்டைகளும் கைப்பற்றப்பட்டன என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பிரதான சிறைச்சாலைகளில் பயன்படுத்தப்படும் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் போதை பொருட்களை கைப்பற்றும் நோக்கில் இந்த சுற்றிவளைப்பு நடத்தப்பட்டது.
நீதிமன்ற அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவின் ஆலோசனையின் பேரில் அனைத்து சிறைச்சாலைகளிலும் இத்திடீர் சுற்றிவளைப்பு நடத்தப்பட்டது.
ஜனவரி மாதம் தொடக்கம் ஏப்ரல் மாதம் வரையில் நாட்டின் பிரதான சிறைச்சாலைகளில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் 73 கையடக்கத் தொலைபேசிகள்- 54 சிம் அட்டைகள் மற்றும் 7 ஹெரோயின் பைக்கற்றுக்கள் கைப்பற்றப்பட்டன என சிறைச்சாலைகள் தலைமையம் தெரிவித்துள்ளது.
கைதிகளின் நலன் விசாரிக்க வரும் சிலர் கையடக்கத் தொலைபேசிகள்- சிம் அட்டைகள் உட்பட பல தடை செய்யப்பட்ட பொருட்களை பல்வேறு உபாயங்களை பயன்படுத்தி சிறைச்சாலைக்குள் கொண்டு வருகின்றனர். இவ்வாறான செயற்பாடுகளினால் கைதிகளின் மனநிலை மேலும் பாதிக்கப்பட்டுள்ளது.
அவர்களின் மனநிலையை மேம்படுத்துவதற்காக சிறைச்சாலையில் மேற்கொள்ளப்படும் பல்வேறு உள அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு முடிந்தளவு அவர்களை பங்குகொள்ள செய்வதனூடாக போதைப்பொருள் பாவனை உட்பட கூடாத பழக்கங்களை நீக்க நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்ற அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளதுடன் அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களின் உதவிகளையும் இதற்காக பெற்றுக்கொள்ள முடியும் என நீதிமன்ற அமைச்சு தெரிவித்துள்ளது.