சிறைச்சாலைக்குள் யோஷித்த ராஜபக்ஷ மொபைல் போன் பயன்படுத்துவது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார்.
பணச்சலவை குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் யோஷித்த ராஜபக்ஷ, சில தினங்களுக்கு முன்னர் தனது உறவினர்களை சந்தித்து விட்டு சிறைக்கூண்டுக்கு திரும்பும் வேளையில் அவரது பாக்கெட்டிலிருந்து மொபைல் ஒன்று கீழே விழுந்துள்ளது.
சிறை விதிகளின் பிரகாரம் எந்தவொரு கைதியும் மொபைல் போன் பயன்படுத்த முடியாது. எனினும் யோஷித்த நவீன வகை மொபைல் போன் ஒன்றை சிறைக்குள் பயன்படுத்தி வருகின்றார். இது ஊடகங்களில் பெரும் பரபரப்புச் செய்தியாக வெளிவந்திருந்தது.
இதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பான விசாரணை நடத்தி இரண்டு நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த காலப்பகுதியிலும் அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறைச்சாலை எச். வார்ட்டில் மட்டுமன்றி அதற்கு வெளியேயும் பகிரங்கமாக மொபைல் போன் பயன்படுத்தியிருந்ததை ஏராளமான கைதிகள் கண்ணுற்றிருந்தனர்.
சிறைச்சாலையில் நடைபெறும் ஞாயிறு ஆராதனைகளின் போதும் ஜோன்ஸ்டன் பகிரங்கமாக நவீன ரக மொபைல் போன் ஒன்றை கையில் வைத்துக் கொண்டிருந்ததை சக கைதிகள் கண்ணுற்றுள்ளனர்.
சிறைச்சாலை விதிகள் வசதியானவர்களுக்கு பொருந்துவதில்லை. அப்பாவிகளுக்கு மட்டுமே கடுமையாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்றும் ஏராளமான கைதிகள் தெரிவித்துள்ளனர்.