”சீனாவின் ஒரு பட்டை ஒரு பாதை ’”(one belt one road)திட்டத்தில் இலங்கையும் முக்கிய கேந்திரமாக கருத்திற்கொடுக்கப்பட்டிருப்பதால் இந்தத் திட்டத்துக்கு தமது நாடு முழு ஆதரவையும் வழங்குமென அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
சீன- இலங்கை உட்கட்டமைப்பு முதலீட்டு கூட்டுறவு மன்றத்தின் மகாநாடு கொழும்பில் இன்று காலை (01/08/2017)இடம்பெற்ற போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த மகாநாட்டில் பங்கேற்றிருந்த சீனக் கம்பனிகளுக்கு தலைமை தாங்கி சீன- சர்வதேச ஒப்பந்த அமைப்பின் தலைவர் பேங் கிச்சன் பங்கேற்றிருந்தார்.
அமைச்சர் இங்கு உரையாற்றும் போது கூறியதாவது.
சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நூற்றாண்டு காலமாக பலமான உறவுகள் இருந்து வருகின்றன.இவ்வாறான ஒரு மகாநாட்டை ஏற்பாடு செய்தமைக்கு இரண்டு நாடுகளின் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிக்கின்றேன். முதலீட்டு வர்த்தக சபையின் கணிப்பீட்டுக்கு இணங்க கடந்த வருடம் இலங்கையானது 801மில்லியன் அமெரிக்க டொலர்களை சீனாவில் இருந்து நேரடி முதலீட்டில் பெற்றுள்ளது பாரிய முதலீடுகளான கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் மற்றும் அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் ஆகியவற்றைத் தவிர்ந்து இலங்கையுடனான முதலீட்டில் சீனா 5வது இடத்தை வகிக்கின்றது.இலங்கைக்கு வரும் சீன உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த 3வருடங்களாக இரட்டிப்படைந்துள்ளது.உல்லாசப்பயண உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக சீனாவில் இருந்து அதிகளவிலான முதலீட்டாளர்களை இலங்கை வரவேற்கின்றது.புடவை மற்றும் ஆடைகள் மீன்பிடி மற்றும் தயாரிப்பு ஆகியவற்றிலும் சீனா வெளிநாட்டு நேரடி முதலீட்டுத் திட்டங்களை இலங்கையில் மேற்கொண்டுள்ளது.எனவே இந்த மகாநாட்டின் பிரதிபலனாக சீன முதலீட்டாளர்கள் மேலும் எமது நாட்டில் தமது நேரடி முதலீடுகளை அதிகரிப்பார்கள் என நான் நம்புகின்றேன்.
2016ம் ஆண்டு இலங்கைக்கு 271,500 சீன உல்லாசப் பயணிகள் வருகை தந்துள்ளார்கள் வர்த்தக திணைக்களத்தின் கணிப்பீட்டின் படி சீனவுடன் இலங்கையின் இருதரப்பு வர்த்தகம் 4.4பில்லியன் டொலராக இருந்தது 2007ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 363சத வீத பிரமாண்டமான ஆதிகரிப்பை அதுகாட்டியுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.
இலங்கைக்கான சீனத் தூதுவர் வை.ஷியான் லியாங் இங்கு கருத்து தெரிவித்தபோது,
அம்பாந்தோட்டைத் துறைமுக ஒப்பந்தம் தொடர்பில் தவறான கருத்துக்கள் நிலவுகின்றன. உண்மையில் இந்த ஒப்பந்தம் மூலோபாய இலக்கைக்கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஒன்றல்ல. இது ஒரு தூய்மையான வணிக ஒப்பந்தமே.இலங்கையில் பல எண்ணிக்கையான கைத்தொழில் வலயங்களை உருவாக்குவதை,விட பாரிய ஒன்று அல்லது இரண்டு கைத்தொழில் வலயங்களை உருவாக்குவதே சிறந்தது என பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவிடம் நான் முன்னர் தெரிவித்துள்ளேன். சீனாவும் அந்த திட்டத்துக்கு உதவும் என தெரிவித்தோம்.அதிக எண்ணிக்கையான கைத்தொழில் வலயங்களை உருவாக்குவதற்கு இலங்கையில் நிலப்பற்றாக்குறை இருக்கின்றது அத்துடன் அவ்வாறு உருவாக்குவதால் போக்குவரத்துச் செலவு மற்றும் இன்னோரன்ன செலவுகளைக் குறைக்கமுடியும் என பிரதமரிடம் எடுத்துரைத்தேன்.
இந்த நிகழ்வில் நிர்மாணக்கைத்தொழில் சம்மேளனத் தலைவர் சுரத்விக்ரமசிங்க ஆகியேர் உட்பட வெளிநாட்டு வர்த்தக பிரம்முகர்களும் கலந்துகொண்டனர்.
(சுஐப் எம் காசிம்.)