வலிமையான நாடாக வளர்ந்துவரும் நாடான சீனாவுக்கு சுயகட்டுப்பாடு தேவை என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வலியுறுத்தியுள்ளார்.
சீனாவில் நடைபெறும் ஜி-20 நாடுகளின் உச்சிமாநாட்டில் பங்கேற்க சென்றுள்ள அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, முன்னதாக அமெரிக்க தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி நேற்று ஒளிபரப்பானது. அந்த பேட்டியில் சீனாவைப் பற்றிய தனது கண்ணோட்டத்தை ஒபாமா பதிவு செய்துள்ளார்.
சர்வதேச சட்டங்களுக்கும் விதிமுறைகளுக்கும் நாம் கட்டுப்படுகிறோம் என்றால், அது நிர்பந்தத்தினால் அல்ல. ஆனால், சர்வதேச ஒழுங்குமுறையை நாம் ஏற்றுக் கொள்கிறோன் என்பதற்காக நீண்டகாலமாக நாம் சுயகட்டுப்பாட்டின் காரணமாக இதற்கு இணங்குகிறோம். சீனாவுக்கும் இது பொருந்தும் என நான் கருதுகிறேன்.
இப்படி சுயகட்டுப்பாட்டின் மூலம்தான் அமெரிக்கா பலம் பொருந்திய நாடாக உள்ளது என்பதை சீன அதிபரிடம் நான் தெரிவித்துள்ளேன், எனவே, தென்சீனக் கடல் பகுதியில் அத்துமீறல் மற்றும் பொருளாதார கொள்கை தொடர்பாக அவர்களின் (சீனா) நடத்தையால் சர்வதேச விதிமுறைகள் மீறப்படும் வேளையில் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என நாங்கள் சுட்டிக் காட்டியுள்ளோம்.
சர்வதேச விதிமுறைகளுக்கு உட்பட்டு நடந்து கொண்டால் சீனாவும், அமெரிக்காவும் பங்காளிகளாக இருக்கலாம் என்பதை உணர்த்த முயற்சித்துள்ளோம் என அந்த பேட்டியின்போது ஒபாமா தெரிவித்துள்ளார்.