பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாரம் மேற்கொள்ளவுள்ள சீன விஜயத்தின் போது இரு நாடுகளுக்கிடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை உருவாக்குவது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார்.
அதுமட்டுமன்றி பல்வேறு உடன்படிக்கைகளும் இந்த விஜயத்தின் போது கைச்சாத்திடப்படவுள்ளன. முதலீடுகளை ஊக்குவித்தல், பொருளாதார மற்றும் தொழில்நுட்ப கூட்டுறவு சிறுநீரக நடமாடும் சேவை, விளையாட்டு கூட்டுறவு சுற்றுலாத்துறையை ஊக்குவித்தல், தெற்கு அதிவேக பாதைக்கான இரண்டாம் கட்ட அபிவிருத்தி கம்பஹா அத்தனகல்ல, மினுவங்கொடப் பகுதிகளுக்கான நீர்வழங்கல் கடன் உடன்படிக்கை போன்றன கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் புதன்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சர்வதேச வர்த்தக மற்றும் உபாய அமைச்சர் மலிக் சமரவிக்கிரம மற்றும் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா , சரத் அமுனுகம, ரவூப் ஹக்கீம் ஆகியோர் பீஜிங் பயணமாகின்றனர். தற்போது அவுஸ்திரேலியா சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அங்கிருந்தவாறு பீஜிங் பயணிக்கவுள்ளார்.
சீன ஜனாதிபதி பிரதமர் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடனும் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.