அமெரிக்க அதிபர் ஒபாமாவை வெள்ளை மாளிகையில் திபெத் ஆன்மிகத் தலைவர் தலாய் லாமா சந்தித்துப் பேசினார். முன்னதாக ஒபாமா-தலாய் லாமா சந்திப்புக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இந்த சந்திப்பு இருநாடுகளின் உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எச்சரிகை விடுத்திருந்தது.
ஆனால் சீனாவின் எதிர்ப்பையும் மீறி அதிபர் ஒபாமாவை தலாய் லாமா தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு குறித்து வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் ”திபெத்துக்கு விடுதலை வேண்டும் என்று தாம் கோரவில்லை என்று ஒபாமாவிடம் தலாய் லாமா தெரிவித்தார். தனது பிரதிநிதிகளுடன் சீன அரசு மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்கும் என நம்புவதாக அவர் கூறினார்.
சீனாவில் திபெத்தியர்களுக்கான சூழ்நிலை குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். திபெத்தின் தனித்துவமிக்க மத, கலாச்சார, மொழி பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கும் சீனாவில் உள்ள திபெத்தியர்களின் மனித உரிமைகள் பாதுகாப்புக்கும் ஒபாமா ஆதரவு தெரிவித்தார்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒபாமா அமெரிக்க அதிபராக இருக்கு 8 ஆண்டுகளில் இரு தலைவர்களும் சந்தித்துக்கொள்வது இது நான்காவது முறையாகும்.